கோவில்கள், வழிபாட்டு தளங்கள் திறந்ததால் மக்கள் மகிழ்ச்சி!
தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலையின் காரணமாக கடந்த எழுபது நாட்களாக கோவில்கள் அனைத்தும், மத வழிபாட்டு தலங்கள் அனைத்தும், மூடப்பட்டு இருந்தது. எனவே பக்தர்கள் அனைவரும் மிகுந்த வருத்தத்தில் வீட்டிலேயே கடவுள்களை கும்பிட்டு வந்தனர். இந்நிலையில் இன்று முதல் தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
அதனால் அனைத்து மாவட்டங்களிலும் சில தளர்வுகள் செயல் படுத்தப்பட்டுள்ளன. அதில் கோவில்களும் ஒன்று கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள் உள்பட அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் ஏப்ரல் மாதம் முதல் மூடிய நிலையில் இந்தக் கோவில்களில் உள்ள பணியாளர்கள் மட்டும் ஆகமவிதிப்படி வழக்கமான பூஜைகளை செய்து வந்தனர்.
பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் அவர்கள் மட்டுமே கோவில்களில் பூஜைகளை ஏற்பாடு செய்து வந்தனர். பக்தர்கள் இதன் காரணமாக மிகுந்த ஏமாற்றத்தில் இருந்தனர். தற்போது தளர்வுகள் இன்றுமுதல் அறிவிக்கப்பட்டதால் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் உட்பட, அனைத்து மத வழிபாட்டு தலங்களும் முழுமையாக திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களும் இன்று அதிகாலை முதலே திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதனை தொடர்ந்து நேற்று ஊழியர்கள் அனைவரும் எல்லா பெரிய கோவில்களிலும் சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டனர். இன்று அதிகாலையிலேயே கோவில்களில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, சமூக இடைவெளியையும் கடைபிடித்து, வழிபாடு செய்து வருகின்றனர்.
கோவில் நுழைவு வாயிலில் பக்தர்களின் உடல் வெப்பநிலை சரிபார்க்கப்பட்டு, கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்த பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர், என்ற தகவலும் கிடைத்துள்ளது. சுமார் 2 மாதங்களுக்கு பின் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், பழனி முருகன் கோவில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் உட்பட பல கோவில்கள் திறந்ததால் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்து தரிசனத்திற்காக சென்றுள்ளனர்.