பொதுவாக அனைவரது வீட்டிலும் விநாயகர், லட்சுமி, சரஸ்வதி, முருகன், பெருமாள் இதுபோன்ற கடவுளின் புகைப்படங்களை தான் பெரும்பாலும் வைத்திருப்பார்கள். இப்படி பொதுவான கடவுளின் புகைப்படங்களை பூஜை அறையில் வைத்திருப்பது நல்லது தான். ஆனால் ஒருவரின் ராசிக்கு எந்த தெய்வம் பலம் கொடுக்கும் என்பதை தெரிந்து கொண்டு, அந்த கடவுளின் புகைப்படத்தையும் பூஜை அறையில் வைத்துக் கொண்டால் அவர்களது வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும்.
அதாவது ஒருவர் எந்த லக்னத்தில் பிறந்து இருந்தாலும் அவரது லக்னத்தில் இருந்து அடுத்த 5 வது லக்னத்திற்கு உரிய தெய்வம் தான் அந்த லக்னத்திற்கு பலம் கொடுக்கக்கூடிய தெய்வம் ஆகும். மேலும் ஐந்தாவது இடம் என்பது அதிர்ஷ்டம் தரக்கூடிய இடம்.
எனவே ஐந்தாவது இடத்திற்கு உரிய தெய்வத்தை வழிபடும் பொழுது கர்மாக்கள், தடைகள், பாவங்கள் ஆகிய அனைத்தும் நீங்கி நன்மைகள் நடைபெறும். இந்த பதிவில் ஒவ்வொரு ராசிக்கும் உரிய தெய்வங்கள் எவை எவை என்பது குறித்து காண்போம்.
1. மேஷம்:
மேஷம் லக்னத்திற்கு ஐந்தாவது இடம் என்றால் சிம்மம். எனவே இவர்கள் சிவபெருமான், அண்ணாமலையார் போன்ற தெய்வங்களின் புகைப்படங்களை பூஜை அறையில் வைப்பது சிறப்பை தரும். இதனால் இவர்களுக்கு மன அமைதி கிடைக்கும். பிரதோஷ வழிபாடு செய்தால் மேலும் பல சிறப்புகளை தேடி தரும்.
2. ரிஷபம்:
ரிஷபம் லக்னத்திற்கு ஐந்தாவது இடம் கன்னி. கன்னி லக்னம் என்பது கேரளாவை குறிக்கக்கூடிய ஒன்று. எனவே கேரளாவில் இருக்கக்கூடிய குருவாயூரப்பர், பெருமாள் போன்ற தெய்வங்களின் புகைப்படம் உங்கள் பூஜை அறையில் இருப்பது நல்லது.
3. மிதுனம்:
மிதுனம் லக்னத்திற்கு ஐந்தாவது இடம் துலாம். மகாலட்சுமி மற்றும் ஆதிதிருவரங்கத்தின் பெருமாள் வழிபாடு சிறப்பை தரும். எனவே இந்த கடவுளின் புகைப்படம் உங்கள் பூஜை அறையில் இருப்பது சிறப்பு.
4. கடகம்:
கடகம் லக்னத்திற்கு ஐந்தாவது இடம் விருச்சிகம். திருச்செந்தூர் முருகரின் வழிபாடு வெற்றிகளை தேடி தரும். எனது முருகனின் திருவுருவ படத்தை பூஜை அறையில் வைத்து வழிபடுவது சிறப்பை தரும்.
5. சிம்மம்:
சிம்மம் லக்னத்திற்கு ஐந்தாவது இடம் தனுசு. சித்தர்கள், சிவன், பெருமாள், ஸ்ரீ ராமர் போன்ற தெய்வங்களை வழிபடுவது பல சிறப்புகளை தேடி தரும். மேலும் அம்பாள் மற்றும் ஸ்ரீராமரின் பட்டாபிஷேக புகைப்படம் பூஜை அறையில் இருப்பது நல்லது. அதேபோன்று ராமாயணம் புத்தகமும் வீட்டில் இருக்க வேண்டும்.
6. கன்னி:
கன்னி லக்னத்திற்கு ஐந்தாவது இடம் மகரம். சுப்பிரமணியர் (முருகன்) புகைப்படம் பூஜை அறையில் இருப்பது சிறப்பை தேடி தரும்.
7. துலாம்:
துலாம் லக்னத்திற்கு ஐந்தாவது இடம் கும்பம். உயர்ந்த கோபுரங்கள் இருக்கின்ற கோவில்களின் வழிபாடு சிறப்பு தரும். இந்த கோவில்களின் வழிபாடு மன அழுத்தத்தை குறைக்கும். ஸ்ரீரங்கம், திருக்கோவிலூர், ஸ்ரீவில்லிபுத்தூர் இதுபோன்ற கோவில்களின் கோபுர புகைப்படங்களை பூஜை அறையில் வைக்கலாம்.
8. விருச்சிகம்:
விருச்சிகம் லக்னத்திற்கு ஐந்தாவது இடம் மீனம். மதுரை மீனாட்சி அம்மன், திருச்செந்தூர் முருகன் போன்ற தெய்வங்களின் வழிபாடு சிறப்பை தரும்.
9. தனுசு:
தனுசு லக்னத்திற்கு ஐந்தாவது இடம் மேஷம். மலை மேல் இருக்கின்ற முருகர் குறிப்பாக பழனி மலை முருகர் ராஜ அலங்கார படம் வீட்டில் வைத்து வழிபடுவது சிறப்பைத் தரும்.
10. மகரம்:
மகரம் லக்னத்திற்கு ஐந்தாவது இடம் ரிஷபம். கோ பூஜை பார்ப்பது, மகாலட்சுமி வழிபாடு, பிரதோஷ வழிபாடு போன்றவை சிறப்பை தரும்.
11. கும்பம்:
கும்பம் லக்னத்திற்கு ஐந்தாவது இடம் மிதுனம். சக்கரத்தாழ்வார், பெருமாள், ஸ்ரீ ராமர் போன்ற தெய்வங்களின் புகைப்படங்களை பூஜை அறையில் வைத்துக் கொள்ளலாம்.
12. மீனம்:
மீனம் லக்னத்திற்கு ஐந்தாவது இடம் கடகம். அம்பாள் புகைப்படம் சிறப்பை தரும். அதிலும் குறிப்பாக அபிஷேகம் செய்வது போன்ற அம்பாளின் புகைப்படம் யோகத்தை தரும்.