அதிமுகவிடம் நெருங்கி வரும் பாமக! வெளிப்படையாக பேசிய அன்புமணி ராமதாஸ்

0
199
#image_title

அதிமுகவிடம் நெருங்கி வரும் பாமக! வெளிப்படையாக பேசிய அன்புமணி ராமதாஸ்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமகவுக்கு அதிமுக தொண்டர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளிப்படையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தொகுதியை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.அங்கு வரும் ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.இதனால் ஆளும் திமுக, பாமக மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் இந்த இடைத்தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் சி அன்புமணிக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தொகுதி முழுவதும் தொடர் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் அவர் மேடையில் பேசும் போது இந்த தேர்தலில் போட்டியிடாத கட்சியான அதிமுக மற்றும் அதன் கூட்டணியில் இருக்கும் தேமுதிக ஆகியவை தங்களுக்கு ஆதரவு தர வேண்டுமென கேட்டு கொண்டார். மேலும் நமக்கு பொது எதிரியாக இருக்கும் திமுகவை வீழ்த்த வேண்டும்.ஆளும் கட்சி இந்த தேர்தலில் பண பட்டுவாடா செய்ய அதிக வாய்ப்புள்ளது.அவ்வாறு காசு கொடுத்தாலும் மக்கள் யாரும் அவர்களுக்கு ஓட்டு போட மாட்டார்கள்.ஏனெனில் எங்கள் கட்சிக்கு வாக்களிப்பதன் மூலமே சமூக நீதி நிலை நிறுத்தப்படும் என்பதில் மக்கள் நம்பிக்கை கொண்டு உள்ளனர்.

மேலும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு தராமல் அரசு மறுத்து வருகிறது.இது அவர்களுக்கான உரிமை மட்டுமே , ஏனெனில் வேலை வாய்ப்பு, கல்வியில் இடம் கொடுத்து முன்னேற்றுவதற்கான ஒரு வாய்ப்பாக தான் கருத வேண்டும்.இதனை வைத்து சாதி பிரச்னையை தூண்ட கூடாது.

எனவே அனைத்து கட்சி நிர்வாகிகளும் தங்களுக்கு ஒத்துழைப்பு தந்து இந்த இடைத்தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை பாமகவிற்கு கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.இவர் இவ்வாறு பேசிக் கொண்டிருந்த இந்த பிரச்சாரக் கூட்டத்தில் அங்கு கூடியிருந்த சிலர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் புகைப்படம் இருக்கும் பதாகைகளை ஏந்தி கொண்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகி பாஜக கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்ட பாமக இந்த இடைத்தேர்தலில் அதிமுக தொண்டர்கள் ஆதரவை கேட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வானது மீண்டும் பாமக அதிமுக கூட்டணியை நோக்கி நகர்கிறதோ என்ற கேள்வியை எழுப்புகிறது