PMK BJP: 2026 யில் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலுக்காக கட்சிகள் அனைத்தும் தீவிரமாக செயல்பட்டு வரும் சமயத்தில் பாமகவில் மட்டும் தந்தை-மகன் மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. ராமதாஸ் தனது பேரன் முகுந்தனுக்கு பாமகவில் முக்கிய பொறுப்பை வழங்கியதிலிருந்து ஆரம்பித்த சண்டை இன்னமும் ஓயவில்லை. இதனால் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ராமதாஸ் பக்கமும், இளைஞர்கள் அன்புமணி பக்கமும் ஆதரவு தெரிவித்து வந்தனர். இரண்டாக பிளவுபட்ட கட்சியான பாமக யாருடையது என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது.
இந்நிலையில் உட்கட்சி விவகாரம் காரணமாக மகன் என்று கூட பாராமல், அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து நீக்கினார் ராமதாஸ். ஆனால் தேர்தல் ஆணையம் தலைவர் மற்றும் சின்னத்திற்கு உரியவர் அன்புமணி தான் என்று தீர்ப்பளித்தது. இதனை தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறிய நிலையில், அன்புமணி அதிமுக பக்கமும், ராமதாஸ் திமுக பக்கமும் ஆதரவு தெரிவித்து வந்தனர். இதனால் பாமக கூட்டணி இன்னும் உறுதி செய்யபடாமலே உள்ளது.
இந்நிலையில் கட்சியின் தலைவர் அன்புமணி என்று தேர்தல் ஆணையம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ராமதாஸ் போராட்டம் நடத்த திட்டமிட்ட நிலையில், தற்போது புதிய திருப்பமாக, டெல்லி உயர்நீதி மன்றத்தில் ராமதாஸ் வழக்கு தொடுத்துள்ளார். பாமக பிரச்சனையில் பாஜக மேலிடம் உதவி வரும் நிலையில் ராமதாஸ் மீண்டும் டெல்லியை நாடி இருப்பது அன்புமணிக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. பாமகவில் உள்ள குழப்பத்தை தீர்த்து அவர்களை தங்கள் கூட்டணியில் சேர்ப்பதே பாஜகவின் பிளான் என்று பலரும் கூறுகின்றனர்.

