DMK PMK: அடுத்த வருடம் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் தேர்தல் களம் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. கூட்டணி வியூகங்களும், தொகுதி பங்கீடும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த காலகட்டத்தில் எந்த ஒரு கட்சியும் கூட்டணி இல்லாமல் ஆட்சிக்கு வருவது சாத்தியமில்லை. இது திராவிட கட்சிகளுக்கு பொருந்தும். அதனால் அதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஆட்சி கட்டிலில் அமர்ந்து வருவதால், மூன்றாம் நிலை கட்சிகளிடம் கூட்டணி பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளது.
அந்த வகையில் அதிமுக-பாஜக கூட்டணி மட்டுமே உறுதியான நிலையில், திமுக கூட்டணி கட்சிகளிடையே பல்வேறு காரசார விவாதங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதனால் திமுக தங்களது கூட்டணியை பலப்படுத்த பல்வேறு முயற்சிகளை கையிலெடுத்து வருகிறது. ஒரு வேலை இப்போது இருக்கும் கூட்டணி பிரிந்தாலும், தேமுதிக, பாமக கூட்டணியை வைத்து தேர்தலை சந்திக்கலாம் என்று திமுக திட்டம் தீட்டிய நிலையில் அந்த ஆசையும் தற்போது நிறைவேறாமல் போய் விட்டது.
முதலில் பாமகவிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய திமுகவிற்கு அப்பா-மகன் சண்டை பெரும் தடையாக உள்ளது. இதனால் ராமதாஸ், திமுக பக்கமும், அன்புமணி அதிமுக பக்கமும் தங்களது ஆதரவை தெரிவித்து வந்தனர். இதனை காரணமாக பாமக கூட்டணி உறுதியாகாமலே இருந்தது. ஆனால் நேற்று நடந்த தூய்மை பணியாளர் போராட்டத்தில் அதற்கு முடிவு கிடைத்துவிட்டது. தனியார்மயத்தை எதிர்த்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு நேரில் சென்று ஆறுதல் அளித்த பாமக பொருளாளர் திலகபாமா, பொது மக்களின் கோரிக்கையை முதல்வர் நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
மேலும், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் கொடுக்கும் திமுக அரசு, தூய்மை பணியாளர்களின் கோரிக்கையை ஏன் நிறைவேற்றவில்லை என்று கேள்வி எழுப்பியிருந்தார். தேர்தல் சமயத்தில் மட்டும், அப்பா-மகன் வேடம் போடும் ஸ்டாலின் பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென கூறியிருந்தார். திமுகவை கடுமையாக எதிர்த்திருக்கும் இவரின் கருத்து, பாமக, திமுக உடன் கூட்டணியில் சேர போவதில்லை என்பதை தெளிவாக கூறியிருக்கிறது என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

