மக்கள் எதிர்ப்பை மீறி ஆரம்பித்த மணல் குவாரியை தடுத்து நிறுத்திய பாமகவினர்

Photo of author

By Ammasi Manickam

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் மக்கள் எதிர்ப்பையும் மீறி ஆரம்பித்த மணல் குவாரியை பாமகவினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள குமாரமங்கலம் என்ற கிராமத்தில் பாயும் மணிமுத்தாறில் தமிழக அரசின் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை சார்பாக மாநில சுற்றுசுழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் அனுமதியையும் பெற்று, மாவட்ட ஆட்சியரின் செயல்முறை ஆணையத்தின் வாயிலாக ஓர் ஆண்டிற்கான ஒப்பந்தத்துடன் அங்கு அரசு மணல் குவாரி அமைக்கப்பட்டு, இன்று காலை அதனை ஆரம்பித்தனர்.

இந்த பகுதியில் பாயும் இந்த ஆற்றில் நீர்ப்பாசன திட்டத்திற்காக கடந்த 1865 ஆம் ஆண்டு அணை கட்டப்பட்டு வடக்கு பாசனத் திட்ட வாய்க்கால் மூலமாக 44,400 ஏக்கர் பரப்பளவிலும், தெற்கு பாசன திட்ட வாய்க்கால் மூலமாக ஏறக்குறைய 31,000 ஏக்கர் பரப்பளவிலும் இதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சுமார் 30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் என்.எல்.சி. சுரங்கங்கள் அமைத்ததால் ஏற்கனவே இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டமானது முற்றிலும் குறைந்துள்ள நிலையில், தற்போது இந்த பகுதியில் அரசு மணல் குவாரியானது அமைக்கப்பட்டால் இங்குள்ள விவசாயிகள் முற்றிலுமாக விவசாயம் செய்ய முடியாது என்றும், விவசாயத்தை அழிக்கும் வகையில் இங்கு மணல் குவாரி அமைக்கக் கூடாது என்றும் கூறி அப்பகுதியுள்ள விவசாயிகள் இந்த மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பொதுமக்களின் எதிர்ப்புக்கு ஆதரவாக களமிறங்கி அரசு மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர். சார்பாக போராட்டம் நடைபெற்றது. பொதுமக்களுக்கு ஆதரவாக நடைபெற்ற இந்த போராட்டத்தில் பாமகவின் மாநில துணைப் பொதுச்செயலாளர் அசோக்குமார் தலைமையேற்க, மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர்  மணல் ஏற்றி வந்த லாரிகளை மறித்து மணல் குவாரிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

பின்னர் இந்த போராட்டம் குறித்து தகவலறிந்து அந்த பகுதிக்கு சென்ற விருத்தாசலம் வட்டாட்சியர் செல்வமணி, காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினருடன் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். ஆனால் விவசாயிகளை பாதிக்கின்ற எவ்விதச் செயலையும் பாமக ஆதரிக்காது என்றும், ஒரு பிடி மணலைக் கூட அள்ள அனுமதிக்க மாட்டோம் என்றும் பாமகவினர் மணல் குவாரிக்கு எதிராக தங்களது எதிர்ப்பை உறுதியாகத் தெரிவித்ததையடுத்து மணல் லாரி மற்றும் மணல் அள்ளும் இயந்திரத்தை வெளியே எடுத்துச் சென்றனர். இதனையடுத்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாமகவை சேர்ந்த போராட்டக்குழுவினர் கலைந்து சென்றனர்.