கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தமிழக கர்நாடகா எல்லைப் பகுதியில் கக்கனூர் சோதனை சாவடி அமைந்துள்ளது. இந்த சோதனை சாவடியில் ஏராளமான வாகனங்கள் நின்று செல்லும். அதுபோல கர்நாடகவை சேர்ந்த கார் ஒன்று கடந்த 24ஆம் தேதி இரவு அந்த சோதனை சாவடியில் நிற்காமல் சென்றுள்ளது. அப்போது அந்த காரை சோதனை சாவடியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தால் போலீசார் பின்தொடர்ந்து சென்ற பொழுது அந்த கார் பேரிகை அருகே முதுகுறுக்கி கிராமத்தில் உள்ள தென்னந்தோப்பிற்குள் நுழைந்துள்ளது. மேலும் அந்த காரை பின் தொடர்ந்து சென்ற போலீசாருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
அந்த தென்னந்தோப்பில் டிஜே பார்ட்டி கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது. வெளி மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் ஆண்கள் என ஏராளமானோர் அரைகுறை ஆடையுடன் போதையில் தள்ளாடியபடி ஆட்டம் பாட்டத்துடன் இருந்தனர்.போலீஸ் வருவதை கூட கண்டுகொள்ளாமல் அவர்கள் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை பிடித்து விசாரணை நடத்தி அவர்களை சோதனை செய்தனர்.
அப்போது விலை உயர்ந்த போதை மாத்திரைகள், வெளிநாட்டு மதுபானங்கள், கஞ்சா போதை பொருட்களை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர். அவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பினார்கள். போலீசார் காரில் தப்பி வந்த பெங்களூரைச் சேர்ந்த பாலாஜி மற்றும் கோவையைச் சேர்ந்த இக்னேசஸ் லாரன்ஸ் காமிலோ, பீகாரைச் சேர்ந்த ஒருவர் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் விவசாயி ஒருவருக்கு சொந்தமான நான்கு ஏக்கர் தோப்பை ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய் கொடுத்து குத்தகைக்கு எடுத்துள்ளனர்.
அங்கு பண்ணை வீடு அமைத்து இரவு விருந்து நடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் இதற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு இரவு மது போதையுடன் நடன நிகழ்ச்சி நடத்தியதும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் அடுத்த கட்டம் விசாரணையில் இறங்கியுள்ளனர்.