ஒவ்வொரு வருடமும் மத்திய அரசின் சார்பாக 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் இரண்டு தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப் பட்டு வந்தது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக போலியோ பொறிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்ததை தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒரு தவணை மட்டுமே போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த சூழ்நிலையில், வருகின்ற 23ம் தேதி நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று மத்திய அரசு முன்பே கூறி இருந்தது.
இதற்கு இடையில் நாட்டில் நோய்த்தொற்று பரவல் பாதிப்பு அதிகரித்தது இதனால் நோய் தொற்று தடுப்பு பணிகளில் ஈடுபட்டு இருக்கின்ற சுகாதார பணியாளர்களுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் கூடுதலான பணிச் சுமையை ஏற்படுத்தும் அதோடு சொட்டு மருந்து செலுத்த வரும் குழந்தைகளுக்கு நோய்த்தொற்று பரவுவதற்கான வாய்ப்பு இருப்பதால் தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.
இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு ஜனவரி மாதம் 23ஆம் தேதி நடைபெறவிருந்த போலியோ சொட்டு மருந்து முகாமை பிப்ரவரி மாதம் 27ஆம் தேதிக்கு மாற்றி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
இதனையடுத்து தமிழகத்திலும் போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்ரவரி மாதம் 27ம் தேதி நடைபெறும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் உறுதி செய்திருக்கிறார்.
சென்ற வருடம் நாடு முழுவதும் 17 கோடி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது, இதற்காக 24 லட்சம் தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.