பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு பொதுமக்களுக்கு இலவசமாக தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டது. இந்த பரிசு தொகுப்பில் வெல்லம், பச்சரிசி, முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய் ,பாசிப்பருப்பு ,மஞ்சள்தூள், மல்லிதூள், மிளகாய்தூள்,கடுகு,சீரகம் ,மிளகு ,உப்பு,கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு, கோதுமை மாவுடன் கரும்பும் வழங்கப்பட்டது.
இவ்வாறு வழங்கப்பட்ட பொருட்கள் தரமற்றதாக இருப்பதாலும், வெப்பம் காரணமாக, வெள்ளம் உருகி விடுவதாகவும், பச்சரிசி பொட்டலங்கள் உடைக்கப்பட்டு இருப்பதாகவும், ஏலக்காய் அளவு மிகவும் சிறியதாக இருப்பதாகவும், பொதுமக்களிடையே புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் புகார் வழங்கலாம் என்று தெரிவித்து அதற்கான தொடர்பு எண்ணையும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருந்தார்.
இந்த சூழ்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து புகார் இருந்ததன் அடிப்படையில், முதல்வர் ஸ்டாலின் இன்று அது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணி அளவில் நடைபெற இருக்கின்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்க இருக்கிறார்கள்.