தமிழர் திருநாள் என்று போற்றப்பட கூடிய பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு தமிழக அரசின் சார்பாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய், கரும்பு மற்றும் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, உள்ளிட்ட 20 வகையான பொருட்கள் அடங்கிய துணிப்பை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசித்து வரும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. 1 கோடியே 15 லட்சத்து 40 ஆயிரம் நபர்கள் பயன்பெறும் இந்த திட்டத்திற்கு தமிழக அரசு ஆயிரத்து 88 கோடியே 17 லட்சத்து 70 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபாய் 505 என்ற மதிப்பீட்டில் பொங்கல் பரிசுப் பொருட்கள் மளிகை பொருட்கள் உள்ளிட்டவை சேர்த்து வழங்கப்பட இருக்கின்றன. அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை நுகர்வோர் வாணிப கழகம் மூலமாக கொள்முதல் செய்யப்பட்டு பாக்கெட்டுகளாக அடைக்கப்பட்டு இருக்கின்றன. இந்த தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்ற நெய் ஆவின் நிர்வாகத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.
பொங்கல் பரிசுத் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வருகின்ற 3ஆம் தேதி ஆரம்பித்து வைத்திருக்கிறார் அதனை எடுத்து 4 ஆம் தேதி முதல் தமிழ் நாடு முழுவதும் இருக்கின்ற ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட இருக்கின்றன.
பொங்கல் பரிசு தொகுப்பு பொதுமக்களுக்கு நெரிசல் இன்றி வழங்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி இருக்கிறது, அதோடு தற்சமயம் நோய் தொற்று பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொருட்களை விநியோகம் செய்ய வேண்டும் என்றும், அனைத்து நியாயவிலை கடை பணியாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
இதனைத்தொடர்ந்து எல்லா ரேஷன் கடைகளிலும் கூட்ட நெரிசல் இன்றி பொங்கல் பரிசு தொகுப்பை வாங்குவதற்கு விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் இருக்கின்றன.
அவர்களை ஒவ்வொரு தினங்களில் நேரத்தை குறிப்பிட்டு பொங்கல் பரிசுப் பொருட்களை பெறுவதற்கு வரவழைக்க டோக்கன் முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது. நாள்தோறும் 200 குடும்ப அட்டைகள் என்று பொருட்கள் வழங்க வேண்டும் என்று கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
காலை வேளையில் 100 பேருக்கும், மாலையில் 100 பேருக்கும், பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகிக்கப்படும் என்று தெரிகிறது. பொதுமக்களை சமூக இடைவெளி, கிருமிநாசினி, முகக்கவசம், உள்ளிட்டவற்றை கடைபிடிக்க அறிவுறுத்த வேண்டும் என்றும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது.
இதனைத்தொடர்ந்து வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணி நேற்று முதல் ஆரம்பித்திருக்கிறது. தொடர்ந்து மூன்றாம் தேதி வரையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பெறும் நாள், நேரம், உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டு டோக்கன் வினியோகம் செய்யப்படுகிறது.
பொங்கல் பரிசு பொருட்களை வாங்குவதற்கு பொதுமக்களின் கைரேகை பதிவு கட்டாயம் இல்லை என்று அரசு தெரிவித்திருக்கிறது. இதனால் அந்த குடும்பத்தைச் சார்ந்தவர்கள் ரேஷன் அட்டையை காட்டிவிட்டு கையொப்பமிட்டு பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டிருக்கிறது.
தமிழகம் முழுவதும் 33 ஆயிரம் நியாயவிலைக் கடைகள் இருக்கின்றன, சென்னையில் ஆயிரத்து 300 கடைகள் செயல்பட்டு வருகின்றன, நியாய விலை கடை ஊழியர்கள் வீடு, வீடாக, சென்று விநியோகிக்கும் பணியை தொடங்கி இருக்கிறார்கள். வருகின்ற 4ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரையில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நாட்களில் வெளியூர் சென்று இருந்தாலும் அவர்கள் பிறகு வாங்கிக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.