நமது வீட்டின் பூஜை அறை என்று வரும்பொழுது அதற்கான பொறுப்பு என்பது பெண்களுக்கு தான். நமது வீட்டின் சமையலறை மற்றும் பூஜை அறை என்பது பெண்களுக்கானது என்றே இந்த உலகம் வரையறுத்து உள்ளது. சமையலறை வேலை என வரும் பொழுது நமக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் கூட, செய்ய வேண்டும் என்ற கடமைக்காக செய்து முடிப்போம்.
ஆனால் பூஜை அறையில் நாம் எப்பொழுதும் முழு மனதுடனே அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். அவ்வாறுதான் பெண்கள் முழு மனதுடனும், விருப்பத்துடனுமே பூஜை அறையின் சுத்தம் மற்றும் வழிபாட்டினை பெண்கள் அனைவரும் செய்து வருவோம். இந்த பதிவில் பெண்களுக்கு தேவையான பூஜை அறையை எவ்வாறு லட்சுமி கடாட்சமாக வைத்துக் கொள்வது என்பது பற்றி காண்போம்.
நமது வீட்டின் நுழைவு வாயில் பகுதியை எப்பொழுதும் மங்களகரமாக வைத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நமக்கு நேர்மறையான எண்ணங்கள் தோன்றும். பன்னீர் மற்றும் பச்சை கற்பூரத்தை பயன்படுத்தி பூஜை அறையின் மேடையினை சுத்தம் செய்யலாம். இவ்வாறு சுத்தம் செய்யும் பொழுது பூஜை அறை முழுவதும் வாசனையாகவும், பக்தி நிறைந்ததாகவும் இருக்கும்.
கற்பூர டப்பாவில் சிறிதளவு மிளகினை போட்டு வைத்தால் கற்பூரம் கரையாமல் இருக்கும். மஞ்சள் குங்குமத்தில் சிறிதளவு கிராம்பு மற்றும் பச்சைக் கற்பூரம் போட்டு வைத்தால் வண்டு ஏறாமலும், வாசனையாகவும் இருக்கும். பூஜை அறை வாசல் காலில் மஞ்சள் குங்குமம் வைக்கும் பொழுது, அதில் ஜவ்வாது மற்றும் பன்னீர் சேர்த்து வைக்கலாம். இவ்வாறு வைக்கும் பொழுது கோவிலில் வரக்கூடிய வாசனை நமது வீடுகளிலும் வரும்.
நமது வீட்டிற்கு முன்பாக உருளியில் பூ போட்டு வைப்பதன் மூலம் எந்தவித கண் திருஷ்டியும் நமது வீட்டிற்குள் வராது. பூஜை அறையில் தாலிக்கயிறு, மஞ்சள் கொம்பு, மஞ்சள், குங்குமம் இது போன்ற பொருட்களை வைக்கும் பொழுது மங்களகரமாக இருக்கும். நமது வீட்டின் தலைவாசலில் எலுமிச்சம் பழத்தின் ஒரு பகுதியில் மஞ்சளும், மறு பகுதியில் குங்குமத்தையும் தடவி வைப்பதன் மூலம் நமது வீட்டிற்கு பாசிட்டிவ் எனர்ஜி கிடைப்பதோடு கண் திருஷ்டியும் விலகும்.
பூஜை அறையில் ஒரு அகல் விளக்கில் சிறிதளவு சோம்பு, கிராம்பு, ஏலக்காய், பச்சைக் கற்பூரம் ஆகியவற்றை போட்டு வைத்தால் எந்த நேரமும் பூஜை அறை முழுவதும் வாசனையாகவே இருக்கும். நாம் விளக்கு ஏற்றக்கூடிய எண்ணெயில் சிறிதளவு ஜவ்வாது மற்றும் பச்சை கற்பூரத்தை தூளாக்கி போட்டு வைத்து, அதனைக் கொண்டு விளக்கேற்றும் பொழுது நல்ல வாசனையாக இருக்கும்.