ஒரு வீடு என்பதில் மிகவும் முக்கியமான அறை என்றால், அது பூஜை அறை தான். அந்த பூஜை அறையை எவ்வாறு வைத்துக் கொள்ள வேண்டும், எந்தெந்த பொருட்களை வைத்துக் கொள்ளலாம், எந்தெந்த பொருட்களை வைத்துக் கொள்ளக் கூடாது என்றெல்லாம் பலவிதமான சந்தேகங்கள் நமக்குள் இருக்கும். அதற்கான ஒரு எளிய விளக்கத்தை பிரபல ஜோதிடர் செல்வி அவர்கள் கூறியுள்ளார். அதனை தற்போது காண்போம்.
1. பூஜை அறை என்பதில் நமக்கு விருப்பமான அனைத்து பொருட்களையும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் நமது முன்னோர்களின் படத்தை தவிர.
2. நமது முன்னோர்களின் படத்தை பூஜை அறையில் வைக்காமல் வீட்டில் ஹாலில் வைத்துக் கொள்ளலாம். நமது முன்னோர்களின் படத்தை வடக்கு பக்க சுற்றில் மாட்ட வேண்டும். அதாவது அந்த படமானது தெற்கு திசையை பார்த்தவாறு இருக்க வேண்டும். இதுதான் படத்தை மாட்டுவதற்கான சரியான திசை.
3. நமது வீட்டில் பூஜை செய்யும் பொழுது நமது முன்னோர்களையும் மறவாமல் அவர்களுக்கும் தீப தூப ஆராதனை, சாம்பிராணி ஆகியவற்றையும் காட்டி வழிபட வேண்டும்.
4. நாம் ஏதேனும் கோவிலுக்கு சென்று வழிபடும் பொழுது அந்த வழிபாட்டில் ஆயுதங்களை கொடுப்பார்கள். அதாவது ‘வேல்’ போன்ற ஆயுதங்களை நமக்கு கொடுப்பார்கள். அதனை நமது வீட்டில் வைத்து வழிபடக்கூடாது.
5. இது போன்ற ஆயுதங்களை நமக்கு யாரேனும் கொடுத்தால், அதனை நீர் நிலையங்களில் விட்டு விடுவது தான் நல்லது.
6. ஏனென்றால் இந்த வேல் போன்ற ஆயுதங்களை நமது வீடுகளில் வைத்து வழிபட்டால் அதற்கு ஏதேனும் ஒரு சிறிய எலுமிச்சை பழம் காவாவது (பலி) கண்டிப்பாக தினமும் கொடுக்க வேண்டும்.
7. வேலினை நமது பூஜை அறையில் வைத்து வழிபட்டால் அதற்கு தினமும் ஒரு எலுமிச்சம் பழத்தை அந்த வேலில் குத்தி வைக்க வேண்டும்.
8. ஆனால் இவ்வாறு வேலினை வைத்து வழிபடுவதை காட்டிலும், அதனை நீர் நிலையங்களில் விட்டு விடுவது தான் சிறப்பு.
9. நமது பூஜை அறையில் விளக்கு ஏற்றும் பொழுது சுத்தமான நல்லெண்ணெய் மற்றும் பசு நெய் ஆகியவற்றை பயன்படுத்தி தீபம் ஏற்றினாலே போதும். பல்வேறு பலன்களை நமக்கு தேடித் தரும்.
10. சுத்தமான பசு நெய் பயன்படுத்தி விளக்கு ஏற்றும் பொழுது வீட்டில் உள்ள அனைத்து தோஷங்களும் நீங்கும். அதே போன்று வாரத்திற்கு ஒரு முறையாவது வீடு முழுவதும் சாம்பிராணி தூபமும் போட வேண்டும்.