திரையரங்குகளை திறப்பது சம்பந்தமான முடிவை வரும் அக்டோபர் மாதம் 28ஆம் தேதி சுகாதார குழுவின் கூட்டத்தில் விவாதம் செய்து பின்பு முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து இருக்கிறார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை 11 மணி அளவில் அவரது இல்லத்தில் திரையரங்குகளின் உரிமையாளர்களை சந்தித்தார் இந்த சந்திப்பின்போது திரையரங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் ரோகினி பன்னீர் செல்வம், மற்றும் பொருளாளர் இளங்கோவன், ஆகியோரின் தலைமையில் திரையரங்கு உரிமையாளர்கள் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தனர்.
திரையரங்குகள் உரிமையாளர் சங்கத்தினர் முதல்வரிடம் அளித்த மனுவில், அக்டோபர் மாதம் 25ஆம் தேதி ஆயுத பூஜை வருவதால் அன்றே திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும். திரையரங்குகளில் நாள் ஒன்றுக்கு நான்கு காட்சிகள் என்பதற்கு மாற்றாக கூடுதல் காட்சிகளை திரையிட அனுமதி வழங்க வேண்டும். என்றும் ஆண்டிற்கு ஒருமுறை என்ற வழக்கத்தை மாற்றி மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை திரையரங்குகளை புதுப்பிக்க அனுமதி அளிக்க வேண்டும். எனவும் உரிமம் பெறுவதற்கு பொதுப்பணி துறையிடமே அனுமதி பெறுவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் போன்ற, பல கோரிக்கைகளை மனுவாக அளித்தார்கள்.
மனுவை பெற்றுக்கொண்ட முதல்வர் பதில் அளித்து பேசியதாவது அனைத்து தொழில் நிறுவனங்களும் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் குளிர்சாதன வசதியுடன் இருப்பதால் உடனடியாக அனுமதி வழங்க முடியவில்லை. அக்டோபர் 28ஆம் தேதி சுகாதார குழுவின் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு இதுதொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இச்சந்திப்பின் போது அம்பத்தூர் ராக்கி திரையரங்கின் உரிமையாளர் ஹரி, சென்னை உட்லண்ட்ஸ் திரையரங்கின் உரிமையாளர் வெங்கடேஷ், மற்றும் அபிராமி ராமநாதன், உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.