ADMK DMK DMDK: இன்னும் 6 மாதத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக திராவிட கட்சிகளான அதிமுகவும், திமுகவும், மும்முரமாக செயல்பட்டு வரும் நிலையில் கூட்டணி வியூகங்களும் வகுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் புதிதாக உருவாகியுள்ள கட்சியான தவெகவிற்கு பெருகும் ஆதரவை கண்ட அதிமுகவும், திமுகவும், பயத்தில் இருந்தது. ஆனால் திமுகவை அரசியல் எதிரி என்று விஜய் கூறியது அதிமுகவிற்கு ஒரு வகையில் சாதமாக அமைந்தது.
இதன் காரணமாக விஜய்யை அதிமுக பக்கம் இழுக்கும் முயற்சியை தீவிரமாக மேற்கொண்டு வந்தார் இபிஎஸ். இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்த விஜய், கரூர் சம்பவத்திற்கு பிறகு சிறப்பு பொதுக்குழு கூட்டம் ஒன்றை கூட்டினார். அதில் விஜய் தான் முதல்வர் வேட்பாளர், தவெக தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. இதனால் இபிஎஸ் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்தார். விஜய் கூட்டணிக்கு வர மாட்டார் என்பதை உணர்ந்த அவர் பாமக, தேமுதிக போன்ற கட்சிகளுடன் கூட்டணி பேச்சு வார்த்தையில் முழுமையாக ஈடுபட தொடங்கினார்.
பாமக கிட்டத்தட்ட அதிமுக கூட்டணி பக்கம் செல்ல துவங்கிய நிலையில், தேமுதிக பக்கம் இபிஎஸ்யின் கவனம் திரும்பியது. பிரேமலதா இரண்டு பக்கமும் கதவை திறந்து வைத்த நிலையில், தற்போது திமுக கூட்டணிக்கு கிரீன் சிக்னல் காட்டியது போல பிரேமலதாவின் செயல்பாடுகள் உள்ளது. ஏனென்றால், SIR யை எதிர்த்து அனைத்து கட்சி கூட்டம், திமுக தலைமையில் நடந்தது. அதில் திமுகவை எதிர்க்கும் கட்சிகளான அதிமுகவும், தவெகவும் கலந்து கொள்ளவில்லை.
ஆனால் விஜய் பாஜக அமல்படுத்திய SIR குறித்து தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்த வண்ணமே இருந்தார். இந்நிலையில் இந்த கூட்டத்தில் தேமுதிக கட்சியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. திமுக கூட்டணியில் இணையவில்லை என்றால், தேமுதிக இந்த கூட்டத்தை புறக்கணித்து இருக்கலாம். ஆனால் இதில் கலந்து கொண்டு திமுக கூட்டணியில் இணைவதை பிரேமலதா மறைமுகமாக வெளிப்படுத்தி இருப்பதாக அரசியல் ஆர்வலர்கள் கணிக்கின்றனர்.

