DMDK TVK: இன்னும் 6 மாதத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால், மாநில கட்சிகளனைத்தும் தேர்தல் பணியில் முனைப்பை காட்டி வருகின்றன. அதே சமயம் தமிழகத்தில் மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையை நடத்தி வருகிறது. தற்சமயம், அதிமுக-பாஜக கூட்டணி, திமுக உடன் காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே உறுதியாக உள்ளது. அதிலும் திமுக கூட்டணி எப்போது வேண்டுமானாலும் முறியலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் மூன்றாம் நிலை கட்சிகளான தேமுதிக, பாமக போன்ற கட்சிகளின் நிலைப்பாடு என்னவென்றே தெரியவில்லை.
பாமக மெல்ல மெல்ல அதிமுக பக்கம் செல்வது போல் தெரிகிறது. ஆனால் தேமுதிகவோ இரண்டு பக்கமும் கதவை திறந்து வைத்துள்ளது. இந்நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அதிமுக, திமுக கட்சிகளை நேரடியாக விமர்சித்திருப்பது விவாதமாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் தேமுதிக சார்பில் உள்ளம் தேடி, இல்லம் நாடி என்ற பரப்புரை நடைபெற்றது. அதில் பேசிய பிரேமலதா, ஆளும் கட்சிக்கும், ஆண்ட கட்சிக்கும் சவால் விடும் வகையில் தமிழகத்தில் வாக்குச்சாவடி முகவர்களை நியமித்துள்ளோம் என்று கூறியிருந்தார். பிரேமலதா அதிமுக, திமுகவை ஒருசேர விமர்சித்தது இதுவே முதல் முறை.
பிரேமலதாவும், ஆர்.பி. உதயகுமாரும் சந்தித்து பேசியதால் அதிமுக-தேமுதிக கூட்டணி உருவாகும் என்று நினைத்த சமயத்தில் அதிமுகவை பிரேமலதா விமர்சித்து பேசியிருப்பது அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. மேலும் ஸ்டாலினையும் பிரேமலதா பலமுறை சந்தித்து பேசியிருக்கிறார். தற்போது இதற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் சமயத்தில் திராவிடக் கட்சிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம் என நினைத்த பிரேமலதா தற்போது இரு கட்சிகளையும் விமர்சித்தது விஜய் இருக்கும் தைரியத்தில் தான் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால் தேமுதிக-தவெக கூட்டணி உருவாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

