ஜப்பானில் இந்தியில் பேசி அசத்திய இந்திய சிறுவன்! நெகிழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி!

Photo of author

By Sakthi

இந்தியா ஆஸ்திரேலியா அமெரிக்கா ஜப்பான் உள்ளிட்ட நான்கு நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பானில் இன்றைய தினம் நடக்கிறது.

இந்த 4 நாடுகளின் தலைவர்கள் நேரடியாக பங்கேற்கும் இந்த 2வது உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோணி அல்பானீஸ், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா உள்ளிட்டோரும் பங்கேற்று கொள்கிறார்கள். ஜப்பான் பிரதமர் விடுத்த அழைப்பின் பெயரில் பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

தனி விமானத்தின் மூலமாக நேற்று முன்தினம் மாலையில் ஜப்பான் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கு ஏற்றுக் கொண்டார். இதில் முக்கியமாக இந்தோ பசுபிக் பிராந்திய வளத்திற்கான பொருளாதார கட்டமைப்பு தொடக்க நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார் என சொல்லப்படுகிறது.

இந்த அமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, மலேசியா, நியூசிலாந்து போன்ற 13 நாடுகள் உறுப்பினராக இருக்கின்றனர்.

ஜோ பைடன் ஆரம்பித்து வைத்த இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜப்பான் பிரதமர் பங்கேற்றார். அதேசமயம் மற்ற உறுப்பு நாடுகளின் தலைவர்கள் காணொளியின் மூலமாக இணைந்திருந்தார்கள் என சொல்லப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றியபோது இந்த ஐபிஈஎப் உருவாக்கம் இந்து பசுபிக் பிராந்தியத்தில் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியின் எந்திரமாக மாற்றுவதற்கான ஒரு கூட்டு விருப்பத்தின் பிரகடனம் என தெரிவித்திருக்கிறார்.

இந்த பொருளாதாரத்தின் பொருளாதார சவால்களை சமாளிப்பதற்கான பொதுவான மற்றும் ஆக்கபூர்வமான தீர்வுகளை கண்டறிய வேண்டும் என்றும், அவர் கேட்டுக்கொண்டார். முன்னதாக ஜப்பான் நாட்டில் 30க்கும் மேற்பட்ட பிரபல தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார் என சொல்லப்படுகிறது.

அந்த சமயத்தில் இந்தியாவிலுள்ள முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பாக அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வர்த்தகத்தை எளிமையாக்கும் விதத்தில் மத்திய அரசு முன்னெடுத்திருக்கின்ற சீர்திருத்தங்களை எடுத்துக் கூறிய பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் வர்த்தகம் செய்ய வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார் எனவும் சொல்லப்படுகிறது.

இதில் முக்கியமாக புகழ்பெற்ற எலக்ட்ரானிக் நிறுவனமான என் ஈஸி கார்ப்பரேஷன் தலைவர் நோபுகிரோ எண்டோவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார்.

அப்போது அவர் இந்தியாவின் தொலை தொடர்பு துறையில் குறிப்பாக சென்னை அந்தமான் மற்றும் கொச்சி, இலட்சத்தீவு இடையேயான பைபர் கேபிள் திட்டத்தில் என் இ சி நிறுவனத்தின் பங்களிப்பை பாராட்டினார் என சொல்லப்படுகிறது.

இதைத்தொடர்ந்து சுசுகி மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் ஆலோசகர், ஒசாமு சுசுகி தலைவர் டோஷிகிரோ சுசுகி உள்ளிட்டோரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார் என சொல்லப்படுகிறது.

இந்த சந்திப்புக்குப் பின்னர் டோக்கியோவில் வாழும் இந்தியர்களை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அவர்களுக்கிடையில் உரையாற்றிய பிரதமர் இந்தியாவும், ஜப்பானும், இயற்கையான கூட்டாளிகள் என தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் பேசிய அவர், ஜப்பான் உடனான இந்தியாவின் உறவு ஆன்மீகமும், ஒத்துழைப்பு மற்றும் உழவு சார்ந்த இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் ஜப்பான் முக்கிய பங்காற்றி வருகிறது என தெரிவித்திருக்கிறார்.

அத்துடன் பிரச்சினை எவ்வளவு பெரிதாக இருந்தாலும் சரி அதற்கு எப்போதும் இந்தியா தீர்வு கண்டிருக்கிறது. நோய்த்தொற்று காலத்தின் போது ஒரு நிச்சயமற்ற தன்மை இருந்தது. ஆனால் அந்த சூழ்நிலையில் கூட இந்தியாவில் தயாரித்த தடுப்பூசிகளை நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாடுகளுக்கு இந்தியா வழங்கியது என தெரிவித்திருக்கிறார்.

நான் எப்போது ஜப்பான் வந்தாலும் உங்களுடைய பாசத்தை அனுபவிக்கிறேன் உங்களில் பலர் பல வருடங்களாக ஜப்பானில் குடியேறி இங்குள்ள கலாச்சாரத்தை ஒருங்கிணைத்திருக்கிறீர்கள்.

ஆனாலும் இந்திய கலாச்சாரம் மற்றும் மொழி மீதான அர்ப்பணிப்பும் உங்களிடையே எப்போதும் வளர்ந்து வருகிறது என்று அவர் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார்.

பிரதமரை பார்ப்பதற்காக கூடியிருந்த இந்தியர்கள் அடிக்கடி பாரத் மாதா கி ஜே என்றும் மோடி, மோடி, என்றும் கோஷமிட்டு தங்களுடைய உற்சாகத்தை வெளிப்படுத்தினர். பிரதமர் நரேந்திரமோடி தனது உரையை முடித்த பிறகு அவரை ஏராளமான நபர்கள் சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுத்தனர்.

பலரும் அவருடன் கைகுலுக்க முண்டியடித்தனர். இதேபோல டோக்கியோவில் பிரதமர் நரேந்திரமோடி தங்கியிருந்த ஹோட்டலுக்கும் அவரை வரவேற்பதற்காக ஏராளமான இந்திய குழந்தைகள் தங்களுடைய பெற்றோருடன் வருகை தந்திருந்தார்கள்.

இதில் ஒரு சிறுவன் பிரதமர் நரேந்திர மோடியை இந்தியில் பேசிய வரவேற்றதாக சொல்லப்படுகிறது. என்னுடைய பெயர் ரிட்ஸ் கீ ஜப்பானுக்கு உங்களை வரவேற்கிறேன் என இந்தியில் பேசியதைக் கேட்ட பிரதமர் நரேந்திரமோடி மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

அதன்பிறகு அந்த சிறுவனிடம் பணிவாக குனிந்து தட்டிக்கொடுத்து எப்படி இந்தியை கற்றுக் கொண்டாய் என கேட்டார். மேலும் அந்த சிறுவன் வரைந்திருந்த தேசியக்கொடியில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். இதனை பெற்றுக் கொண்ட சிறுவன் மிகுந்த மகிழ்ச்சியுடன் பிரதமருக்கு நன்றி தெரிவித்திருக்கிறான்.

இதற்கு நடுவே ஜப்பானை சேர்ந்த பத்திரிகை ஒன்றில் இந்தியா ஜப்பான் அமைதி நிலைத்தன்மை மற்றும் வளர்ப்புக்கான ஒரு நட்பு என்ற தலைப்பில் மோடி கட்டுரை எழுதினார்.

அமெரிக்க அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்த நிலையில், இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்குமிடையே முதலீடு ஊக்க ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்தியாவின் வெளியுறவு துறை செயலாளர் வினய் குவாத்ரா மற்றும் அமெரிக்காவின் சர்வதேச வளர்ச்சி நிதி கழக தலைமை செயல் அதிகாரி ஸ்காட் நாதன் உள்ளிட்டோர் கையெழுத்திட்டனர்.

இது இந்தியாவில் முக்கிய துறைகளில் முதலீட்டை ஊக்குவிக்கும் என்றும், இந்தியாவில் அமெரிக்க சர்வதேச வளர்ச்சி நிதி கழகம் வழங்கும் மேம்பட்ட முதலீட்டு ஆதரவுக்கு வழிவகுக்கும் என்றும், மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்ஸி தெரிவித்திருக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடியின் ஜப்பான் பயணத்தின் முக்கிய நிகழ்வான குவாட் அமைப்பின் உச்சி மாநாடு இன்று நடைபெறுகிறது. உக்ரைன் போருக்கிடையில் நடைபெறும் இந்த மாநாடு சர்வதேச அளவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.