இந்திய மாணவர்கள் பத்திரமாக மீட்க படுவார்கள்! ரஷ்ய அதிபர் உறுதி!

Photo of author

By Sakthi

உக்ரைன் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கிடையே 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து கடுமையான போர் நடைபெற்று வருவதால் உக்ரேனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணி தொடர்ந்து இரவு பகலாக நடைபெற்று வருகிறது. இதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையில் ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்து வருவதை விரும்பாத உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு முக்கிய கோரிக்கையை வைத்தார்.

அதாவது இந்தியா கேட்டுக் கொண்டால் நிச்சயமாக ரஷ்யா அதனுடைய போரை நிறுத்துவதற்கான வாய்ப்பிருக்கிறது என்று கோரிக்கை வைத்தார். இதனை ஏற்று உடனடியாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

மேலும் அங்கு இருக்கக்கூடிய இந்தியர்களை பத்திரமாக மீட்டு வருவதற்கு உதவிபுரிய வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், உக்ரைன் மீதான போரை நிறுத்திவிட்டு பேச்சு வார்த்தையின் மூலமாக தீர்வு காண வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

மேலும் உக்ரைன் அதிபர் ஐ.நா. சபையில் ரஷ்யாவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட கண்டன தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனாலும் இந்தியா ஐ.நா. சபையில் ரஷ்யாவிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது வாக்களிக்காமல் நடுநிலை வகித்தது.

இதனால் உக்ரைன் இந்தியாவின் மீது கடுமையான அதிர்ச்சியில் இருந்து வருகிறது. அதோடு அமெரிக்கா தொடர்ந்து ரஷ்யாவிற்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறது.

மேலும் அவ்வாறு ரஷ்யாவிற்கு எதிராக வாக்களிக்காமல் ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்பட்டால் இந்தியாவின் மீது பொருளாதார நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார்.

ஆனாலும் கூட தன்னுடைய நீண்டகால நண்பனான ரஷ்யாவின் மீது மிகுந்த பற்று கொண்ட இந்தியா ரஷ்யாவின் பக்கம் தொடர்ந்து நின்று வருகிறது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் ரஷ்யாவின் மீதிருக்கும் கோபத்தை அப்படியே தற்சமயம் இந்தியாவின் மீதும் திருப்பி இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

மேலும் ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் நடந்து வரும் இந்த மீட்பு பணிகளுக்கு உதவுமாறு ரஷ்யா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகளை தொலைபேசி மூலமாக அடிக்கடி தொடர்பு கொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசி வருகின்றார்.

அந்தக் விதத்தில் போர் ஆரம்பித்த பிறகு 2வது முறையாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அவர்களை நேற்று தொலைபேசியில் மூலமாக தொடர்பு கொண்டு பிரதமர் நரேந்திர மோடி 35 நிமிடங்கள் பேசி இருக்கிறார். இந்த உரையாடலின்போது உக்ரைன் போர் நிலவரம் தொடர்பாகவும், ரஷ்யா உடனான பேச்சுவார்த்தை தொடர்பாகவும், பிரதமர் நரேந்திரமோடி அவர்களிடம் உக்ரைன் அதிபர் விளக்கியிருக்கிறார்.

இந்த போர் மற்றும் அதன் விளைவாக எழுந்திருக்கின்ற மனிதாபிமான நெருக்கடிகள் தொடர்பாக நரேந்திர மோடி ஆழ்ந்த கவலையைத் தெரிவித்தார். அதோடு தாக்குதலை கைவிட்டு பேச்சுவார்த்தையின் மூலமாக தீர்வு காண வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறார்.

குறிப்பாக பிரச்சினைகளுக்கு அமைதியான தீர்வையே இந்தியா எப்போதும் ஆதரிக்கும் என்று தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி அந்த விதத்தில் இரண்டு தரப்பும் நேரடிப் பேச்சு வார்த்தையில் ஈடுபடுமாறு கேட்டுக் கொண்டார்.

அதன்பிறகு உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க உக்ரைன் வழங்கிவரும் உதவிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார். அங்கே இன்னும் சிக்கித் தவிக்க கூடிய குறிப்பாக கடுமையான போர் நடைபெற்று வரும் சுமி நகரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க உதவுமாறு கோரிக்கை வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.

பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை தொடர்பாக உக்ரைன் அதிபர் தன்னுடைய வலைதள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, ரஷ்யாவின் படையெடுப்புக்கு உக்ரைன் வழங்கிவரும் பதிலடி தொடர்பாக இந்திய பிரதமரிடம் எடுத்துரைத்தேன் என்றும், இந்தப் போர் சூழ்நிலையில், இந்திய குடிமக்களுக்கு அளித்துவரும் உதவிக்காகவும், உயர்மட்ட அமைதிப் பேச்சுவார்த்தையில் உக்ரைன் காட்டும் உறுதி ஆகியவற்றுக்கு அவர் நன்றி தெரிவித்தார். உக்ரைன் மக்களுக்கு இந்தியா வழங்கி வரும் ஆதரவுக்காக நன்றியை தெரிவித்தேன் என்று குறிப்பிட்டிருந்தார் உக்ரைன் அதிபர்.

உக்ரைனுடனான உரையாடலுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு உரையாற்றினார். இரு தலைவர்களுக்குமிடையேயான இந்த உரையாடல் 50 நிமிடங்கள் நீடித்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்த உரையாடலின் போது ராணுவ தாக்குதலை தொடர்ந்து உக்ரைனில் இருந்துவரும் சூழ்நிலை தொடர்பாக இரண்டு தலைவர்களும் விவாதித்ததாக தெரிகிறது. அதோடு இரண்டு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் இருக்கும் நிலை தொடர்பாகவும் பிரதமர் நரேந்திர மோடியிடம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் எடுத்துரைத்திருக்கிறார்.

அந்த சமயத்தில் பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடம் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு ரஷ்ய அதிபரை கேட்டுக்கொண்டார். அதோடு உக்ரைனில் போர்நிறுத்தத்தை அறிவித்ததற்காகவும் சுமி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு வழிகளை ஏற்படுத்தியதற்காகவும், இந்தியர்கள் வெளியேற உதவித்ற்காகவும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.

இந்த உரையாடலின்போது உக்ரைனில் சிக்கி இருக்கின்ற இந்தியர்களை மீட்கும் பணிகளில் முக்கியத்துவத்தை ரஷ்ய அதிபரிடம் எடுத்துரைத்த பிரதமர் கடுமையான போர் நடைபெற்று வரும் சுமி உள்ளிட்ட பகுதிகளில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்க உதவுமாறும் கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதில் தெரிவித்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் உக்ரைனிலிருந்து இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு முடிந்த அளவு அனைத்து ஒத்துழைப்பையும் வழங்குவதாக பிரதமரிடம் உறுதியளித்தார். உக்ரைன் மீதான தாக்குதல் தொடங்கிய பின்னர் ரஷ்ய அதிபர் புடின் பிரதமர் நரேந்திர மோடி தொடர்பு கொண்டு பேசுவது இது 3வது முறை என்று சொல்லப்படுகிறது.

பிரதமர் நரேந்திரமோடியுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு ரஷ்ய அதிபர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் சுமி நகரிலிருந்து இந்தியர்களை வெளியேற்றுவதை உறுதி செய்ய ரஷ்ய ராணுவ வீரர்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்கள். என்று குறிப்பிட்டிருந்தது.

கார்கிவ் நகரில் தீவிரவாதிகளால் பிடிக்கப்பட்ட இந்திய மாணவர்கள் உக்ரைன் அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்ட சர்வதேச அழுத்தத்தின் காரணமாக, மட்டுமே அங்கிருந்து வெளியேற முடிந்தது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

போரின் மையமாக மாறி இருக்கக்கூடிய சுமியில் 700க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கி இருப்பதுடன் அவர்களை மீட்க இந்திய தூதரகம் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.