அதிமுக பாமக கூட்டணியில் உரசல் ஆரம்பம்! அன்புமணி ராமதாஸின் அதிரடி

0
149
PMK General Council Meeting Today-News4 Tamil Latest Online Tamil News Today
PMK General Council Meeting Today-News4 Tamil Latest Online Tamil News Today

அதிமுக பாமக கூட்டணியில் உரசல் ஆரம்பம்! அன்புமணி ராமதாஸின் அதிரடி

தமிழக அரசியலில் மற்ற எந்த கட்சிகளையும் போல் அல்லாமல் தனக்கென்று சிறப்பான கொள்கைகள் கொண்டு செயல்பட்டு வருவது தான் பாட்டாளி மக்கள் கட்சி. குறிப்பாக மது ஒழிப்பு,புகையிலை ஒழிப்பு, மக்கள் பிரச்சினை,ஆளும் ஆட்சியின் குறைகள் மற்றும் சமூக பிரச்சினைகள் குறித்து தினமும் அறிக்கைகள், அரசிற்கு உதவி செய்யும் வகையில் மாதிரி பட்ஜெட் மற்றும் விவசாயத்திற்கு என தனி பட்ஜெட் என செயல்பட்டு தமிழக அரசியலில் பாமக தனக்கென ஒரு பாணியை பின்பற்றி வருகிறது.

இதை போலவே ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 31 ஆம் தேதி புத்தாண்டு பொதுக்குழு கூட்டம் நடத்துவது பாமகவின் வழக்கம் அந்த வகையில் நேற்று அக்கட்சியின் சார்பாக பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் தமிழர் நலன் மற்றும் கட்சியின் அடுத்தகட்ட செயல்பாடு குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியை முடித்து கொண்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்த அக்கட்சியின் இளைஞர் அணி தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தற்போது அங்கம் வகிக்கும் அதிமுக கூட்டணி குறித்து தன்னுடைய அதிர்ப்தியை தெரிவித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது.

மக்களவைத் தேர்தலின்போது 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வந்தது. அந்த நேரத்தில் நாம் கேட்ட போது ஆட்சிக்கு வரவேண்டும் என்றார்கள் அதனால் அனைத்தையும் கூட்டணிக்காக விட்டு கொடுத்து விட்டோம். ஆனால் உள்ளாட்சித் தேர்தலில் பார்த்தால் அரை சீட், கால் சீட் என நம்மை அவர்களிடம் கெஞ்ச வைப்பது வருத்தமளிக்கிறது. அதிமுகவுடன் கூட்டணி வைத்ததற்கான அங்கீகாரம் நமக்கு கிடைக்கவில்லை என தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

மேலும் கூட்டணியே வேண்டாம் என்று செயல்பட்டு வந்த நாம் அவர்களுக்காக கொள்கையை மாற்றி கூட்டணிக்குச் சென்றோம். இப்போது நாம் அவர்களிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறோம். அதுவும் அந்தந்த மாவட்ட அதிமுக தலைவர்களிடம் சீட் கேட்டு பேச்சுவார்த்தை நடத்துவது வருத்தமளிக்கிறது. அதிமுக தலைமை எங்களது கருத்துகளை ஏற்று இனி வரும் காலங்களில் இதையெல்லாம் சரி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நாம் வெளியிட்ட செய்தியில் அதிமுக பாமகவை பயன்படுத்தி கொண்டு துரோகம் செய்ததாக குறிப்பிட்டதை தான் தற்போது அக்கட்சியின் இளைஞர் அணி தலைவரும் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்த செய்தியை படிக்க கீழுள்ள இணைப்பில் செல்லுங்கள்:

ராமசாமி படையாச்சியார் நினைவு மண்டப திறப்பு விழா: பாமக புறக்கணிப்பு! காரியத்தை சாதித்து கொண்ட எடப்பாடி பழனிசாமி செய்த துரோகம்

திமுகவிற்கு எதிராக மெகா கூட்டணியை அதிமுக மற்றும் பாமக இணைந்து வைத்துள்ளது என்று எண்ணிய நிலையில் இது போன்ற உரசல்கள் கூட்டணியை பிளவுபடுத்தவே செய்யும். விரைவில் தமிழகத்தில் அடுத்த சட்டமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் இரு கட்சிகளும் என்ன முடிவு செய்ய போகின்றன என்று அனைவரும் ஆர்வத்துடன் கவனித்து வருகின்றனர்.

Previous articleஎன்ன செய்ய போகிறார் இந்த தளபதி?
Next articleவிஜய்க்கு போட்டியாக களம் இறங்கிய சூர்யா?