திருமாவளவன் கைதா? சர்ச்சை கருத்துக்கு இந்துக்கள் மத்தியில் வலுக்கும் எதிர்ப்பு!
பெரும்பாலான மக்களான இந்துக்களின் நம்பிக்கைக்கு எதிராகவும், மக்களிடையே மதக்கலவரத்தை தூண்டும் வகையிலும் இந்து கோயில்கள் குறித்து பேசியதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் மீது பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த 15 ஆம் தேதி புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சனாதன கல்வியை வேரறுப்போம் என்ற தலைப்பில் சில முஸ்லீம் அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த அரசியல் மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட விசிக தலைவர் திருமாவளவன் அயோத்தி வழக்கின் தீர்ப்பு குறித்து பேசியிருந்தார்.
அதில் அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து, “பாபர் மசூதி இருந்த இடத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் அதற்கு கீழே ஒரு கட்டமைப்பு இருந்ததை குறிப்பிட்டுள்ளனர். அகழ்வாராய்ச்சியில் அது இந்து கோயில், மசூதி, தேவாலயம் என்று அறிய முடியாது. ஆனால், அந்த கட்டமைப்பை வைத்து அறியலாம். குவி மாடமாக இருந்தால் மசூதி என்றும் கூம்பு போல இருந்தால் கிறிஸ்தவ தேவாலயம் என்றும் அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது இந்து கட்டடம் சர்ச்சைகளை ஏற்படுத்தும் வகையில் பேசியிருந்தார். மற்ற இரண்டு மதங்களை குறித்து பேசும் போது நேர்மறையாகவும்,இந்து கோவிலை பற்றி குறிப்பிடும் போது எதிர்மறையாகவும் பேசியது பெரும்பாலான மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இது தொடர்பான அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திருமாவளவனுக்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடைபெற்றன. இதனை சற்றும் எதிர்பார்க்காத திருமாவளவன் தனது பேச்சுக்கு விளக்கம் அளித்தார் அதில், “நான் பேசியவை உரைவீச்சின் போக்கில் தன்னியல்பாக தெறித்த சொற்களேயாகும். அதில் உள்நோக்கம் இல்லை; உண்மை உண்டு. எனினும், அதற்காக நான் வருந்துகிறேன். பாஜகவின் அரசியலுக்கு எதிராக அரசியல்ரீதியாகவே வாதிடும் என்னை, பாஜகவுக்கு எதிராக நிறுத்தாமல் இந்துக்களுக்கு எதிராக நிறுத்த முயற்சிக்கின்றனர்” என்றும் அவர் அதில் பாஜகவினர் மீது குற்றம் சாட்டியிருந்தார்.
ஆனாலும் அவருக்கு எதிராக பல்வேறு இந்து அமைப்புகள்,சமூக ஆர்வலர்கள் என பல தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்து வந்தன. இந்நிலையில் நடிகை காயத்ரி ரகுராம், திருமாவளவனை கண்டால் செருப்பால் அடிக்க வேண்டும் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு எதிராக விசிகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், விசிக சமூக ஊடக மையம் ட்விட்டர் நிறுவனத்திற்கு அளித்த புகாரின் பேரில் காயத்ரி ரகுராம் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது.
இந்நிலையில் தான் இந்து கோயில்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக விசிக தலைவர் திருமாவளவன் மீது பெரம்பலூர் நகர காவல் நிலையத்தில், இந்து முன்னணியின் நகர செயலாளர் கண்ணன் புகார் அளித்துள்ளார். அவர் அளித்திருந்த அந்த புகாரின் பேரில் திருமாவளவன் மீது பெரம்பலூர் காவல் துறையினர், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 153 பி, 295 ஏ, 298, 504 ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் புகார் அளித்த கண்ணன் தனியார் பத்திரிக்கைக்கு அளித்த தகவலின் படி, “முதலில் எங்களுடைய அமைப்பு யாருக்கும் எதிரானது கிடையாது. இந்து கோயில்கள் குறித்து அநாவசியமாக திருமாவளவன் விமர்சித்துள்ளார். குழந்தை பிறப்பதற்கு மூலமான உடலுறவு என்ற விஷயத்தை பொது வெளியில் பேச முடியாது. அதனால் தான் அது போன்ற சிலைகளை வடித்து கோயில்களில் பாரம்பரியமாக வைத்துள்ளனர். இதனை அசிங்கமான பொம்மை என்று திருமாவளவன் சொல்வதை நாங்கள் எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும். அப்படியென்றால் கோயில்களை கட்டியவர்கள், சிலைகளை வடித்தவர்கள் எல்லாம் முட்டாள்களா?
மற்ற மதத்தினர் என்றால் எதுவும் பேசக்கூடாது. இந்து மதம் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் அப்படித்தானே. தனிநபர்களிடமோ அல்லது ஒரு அறையிலோ நீங்கள் பேசவது சரி. அதனை பொதுவெளியில் பேசலாமா? அப்படியென்றால் இந்துக்கள் எல்லாம் இளிச்சவாயர்கள் என்று நினைத்துக் கொண்டு தானே பேசுகிறார்கள். இதனால் எங்களுடைய வருத்தத்தை பதிவு செய்யும் வகையில் திருமாவளவன் மீது புகார் அளித்துள்ளோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஏற்கனவே திருப்பூரில் இந்து மக்கள் கட்சியினர் ஏற்கனவே திருமாவளவன் மீது வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் இவர் பெரம்பலூரில் வழக்கு தொடர்ந்துள்ளது திருமாவளவனுக்கு சிக்கலை அதிகப்படுத்தியுள்ளது. மக்கள் பிரதிநிதியான ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மக்களிடையே மதக் கலவரத்தை உண்டாக்கும் வகையில் தொடர்ந்து பேசியதால் அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்து அவரை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.