ரஜினியை தொடர்ந்து அரசியலுக்கு குட்பை சொன்ன முக்கிய நபர்!

Photo of author

By Sakthi

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை என்று நேற்றைய தினம் அறிவித்திருக்கின்ற நிலையில், அவரை அரசியல் கட்சி ஆரம்பிக்க வைப்பதற்காக தீவிரமாக முயற்சி செய்த காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் இன்று தன்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கின்றார்.

ரஜினிகாந்த் தன்னுடைய அறிக்கையில் தமிழருவிமணியன் அவர்களையும் குறிப்பிட்டு நன்றி தெரிவித்து இருக்கின்ற நிலையிலே, ரஜினிகாந்த் பெயரை குறிப்பிடாமல் இன்றைய தினம் தமிழருவி மணியன் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

என்னுடைய பால்ய பருவத்தில் நான் காமராஜர் காலடியில் என்னுடைய அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்து 50 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்த என்னுடைய அரசியல் வேள்வியை அப்பழுக்கற்றதாக வைத்திருந்தேன். இரண்டு திராவிட கட்சிகளால் தமிழ்நாட்டில் எல்லா மேலான பொதுவாழ்க்கை பண்புகளும் பாழடைந்து விட்டன. அரசியல் ஊழல் மலிந்த சாக்கடையாக மாறிவிட்டது. சாதி மதம் இனம் மொழி ஆகியவற்றின் பெயரால் சுய ஆதாயம் தேடும் மலினமான பிழைப்புவாதிகள் புகலிடமாக அரசியல் களம் மாறிப்போனது.

இங்கு உண்மைக்கும், நேர்மைக்கும், ஒழுக்கத்திற்கும், சிறிதுகூட மதிப்பு கிடையாது. நான் ஒருபோதும் உண்மைக்குப் புறம்பாக வாழ்ந்தது கிடையாது. யார் இடத்திலும் எந்த சூழ்நிலையிலும் கையேந்திய நிலையில் இருந்ததில்லை. இன்றும் என்னுடைய வாழ்க்கை ஒரு சாதாரண வாடகை வீட்டில் தான் என்னுடைய வாழ்க்கை நடந்து வருகின்றது. மக்கள் நலன் சார்ந்த ஒரு மென்மையான மாற்று அரசியல் இந்த தமிழகத்தில் வரவேண்டும் காமராஜர் ஆட்சியை தமிழகம் மறுபடியும் பெற்றிட வேண்டும். என்ற என்னுடைய கனவை நனவாக்க தொடர்ச்சியாக முயற்சி செய்தது தான் நான் செய்த ஒரே குற்றம் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இதற்காக தரம் தாழ்ந்த விமர்சனங்கள் என் மீது வீசப்பட்டதால், என்னுடைய மனைவி மக்களின் மனமானது மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு விட்டன.

மாணிக்கத்திற்கு கூழாங்கற்களுக்கும் இருக்கும் வித்தியாசம் தெரியாத அரசியல் உலகில் இனி நான் சாதிப்பதற்கு எதுவும் இல்லை. நேர்மையும் தூய்மையும். வாழ்வில் ஒழுக்கமுமமற்ற பல அரசியல் களத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து நான் விலகி நிற்பதே சிறந்தது. எந்த ஒரு கைமாறும் கருதாமல் சமூக நலனுக்காக என்னுடன் கைகோர்த்து நடந்த காந்திய மக்கள் இயக்க நண்பர்களின் அடி தொழுது நான் விடை பெற்று கொள்கின்றேன் இறப்பு என்னை தழுவும் இறுதி நாள் வரை அரசியலில் மீண்டும் அடி எடுத்து வைக்க மாட்டேன்.

திமுகவில் இருந்து விலகும் போது கண்ணதாசன் போய் வருகின்றேன் என்று தெரிவித்தார். நான் போகின்றேன் வரமாட்டேன் என்று உருக்கமாக தன்னுடைய அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றார்.