ADMK DMDK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் விறுவிறுப்பாக செயல்பட தொடங்கிவிட்டது. திராவிட கட்சிகளான அதிமுகவும், திமுகவும் எந்தெந்த கட்சிகளை கூட்டணியில் சேர்க்கலாம் என்று ஆலோசித்து வருகின்றன. அந்த வகையில் பாமக அதிமுக கூட்டணிக்கு கிரீன் சிக்னல் காட்டி வரும் சமயத்தில், தேமுதிக திமுக, அதிமுக என இரண்டு பக்கமும் பேச்சு வார்த்தை நடத்தி வந்தது. மேலும் அனைத்து செய்தியாளர் சந்திப்பிலும் எங்களது கூட்டணி வெற்றி கூட்டணியாக மாறும் என்று நம்பிக்கை தெரிவித்து வந்தார் பிரேமலதா.
இந்நிலையில் தேமுதிக சார்பில் இல்லம் தேடி உள்ளம் நாடி என்ற பிரச்சார பயணமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டத்தில் பரப்புரை மேற்கொள்ளும் போது, அங்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், பிரேமலதாவை சந்தித்து பேசினார். இது வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று ஆர். பி உதயகுமார் கூறினாலும், இதன் பின்னாலும் அரசியல் ஒளிந்திருக்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில், தேமுதிகவிற்கு ராஜ்ய சபா சீட் தருவதாக கூறி கடைசி நேரத்தில் இல்லையென்று கூறியதால், பிரேமலதா இபிஎஸ் மீது கடும் கோபத்தில் இருந்தார்.
இதன் காரணமாக இந்த தேர்தலில் ராஜ்ய சபா சீட்டை எந்த கட்சி ஒதுக்குகிறதோ அந்த கட்சியுடன் தான் கூட்டணி என்று பிரேமலதா உறுதியாக இருந்தார். தற்போது அதிமுக பலமிழந்து உள்ளதால் தேமுதிகவின் கூட்டணியையும் தவற விட்டால் தேர்தலில் வெற்றி பெறுவது கடினம் என்பதை உணர்ந்த இபிஎஸ் சென்ற தேர்தல் போல இப்போது நடக்காது என்ற வாக்குறுதியை பிரேமலதாவிற்கு அளித்திருக்கிறார் என்ற அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. இதன் காரணமாக இன்னும் சிறிது நாட்களில் அதிமுக- தேமுதிக கூட்டணியும் உறுதி செய்யப்படும் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். ஆர்.பி. உதயகுமாரின் இந்த சந்திப்பும் அதனை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.

