ADMK TVK:நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றே சொல்லலாம். நடிகராக இருந்து அரசியலுக்கு வந்த எம்ஜிஆர், விஜயகாந்த் போன்றோர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை போல விஜய்க்கும் நல்ல வரவேற்பு கிடைக்குமென்று சொல்லப்படுகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் விஜய் சமீபத்தில் 2 மாபெரும் மாநாடுகளையும், பிரச்சாரங்களையும் நடத்தி வருகிறார்.
தனது தேர்தல் பரப்புரைகள் அனைத்திலும் திமுகவிற்கும், தவெகவிற்கும் தான் போட்டி என்றும் கூறி வருகிறார். அரசியலுக்கு வந்த ஒரு வருடத்திலேயே முதல்வர் இருக்கைக்கு ஆசைப்படுவது தவறு என பலரும் விமர்சித்து வந்தனர். திமுகவிற்கும், தவெகவிற்கும் தான் போட்டி என்று விஜய் கூறியதை எதிர்த்து இபிஎஸ், வானதி சீனிவாசன் போன்றோர் திராவிட கட்சிகளாக திகழும் அதிமுக, திமுகவிற்கு தான் போட்டி என்று கூறினார்.
இந்நிலையில் திண்டுக்கல்லில் நடைபெற்ற அதிமுக விழாவில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜா பாஜக-அதிமுக கூட்டணியில் பிளவு ஏற்பட வாய்ப்பிருப்பதை மறைமுகமாக கூறியதோடு, திமுக- தவெக என விஜய் கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கும், தவெகவிற்கும் தான் போட்டி, ஆனால் அது இரண்டாவது இடத்திற்கானது என்றும், எடப்பாடி பழனிச்சாமியை மக்கள் முதல்வராக எப்போதோ ஏற்றுக்கொண்டார்கள் எனவும் கூறினார்.
அது மட்டுமல்லாமல் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்குமென்றும் உறுதியளித்தார். அதிமுகவிலிருந்து பலரும் விஜய்க்கு எதிராக குரல் எழுப்புவது தவெக, அதிமுக இடையே விரிசலை உண்டாக்கும் என்றும் சொல்லப்படுகிறது.