
ADMK: கரூரில் நடந்த மிக துயரமான சம்பவத்தை பற்றி அனைவரும் அறிந்திருப்போம். கூட்ட நெரிசல் காரணமாக 41 உயிர்கள் பலியான சோகம் நாட்டையே உலுக்கியது. இந்த விபத்திற்கு காரணம் விஜய் தாமதமாக வந்தது தான் என்று அனைவரும் கூறி வர, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மட்டும் சம்பவம் நடந்த அன்று முதல் இன்று வரை விஜய்க்கு ஆதரவு அளித்தும், 41 பேர் இழப்புக்கு காரணம் காவல்துறையினரின் கவனக்குறைவு தான் காரணம் என்றும் கூறி வருகிறார்.
இதனால் அவர் விஜய்யை கூட்டணியில் சேர்க்க துடிக்கிறார் என்று ஆளுங்கட்சி முதல் அனைத்து கட்சிகளும் கூறி வந்தன. மேலும் அதிமுக பிரச்சாரத்தில் தவெக கொடி பறந்ததை பார்த்து இபிஎஸ் பிள்ளையார் சுழி பொட்டச்சு என்று கூறியிருந்தார். இதனால் எதிர்க்கட்சிகளின் கருத்து உண்மையானது. ஆனால் விஜய் எங்களை தலைமையில் தான் கூட்டணி, நான் தான் முதல்வர் என்று கூறுவதால், அவரை சமாதானம் செய்யும் முயற்சியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இறங்கியுள்ளார்.
ஆனால் இவரின் இந்த முயற்சியை கலைக்கும் விதமாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்து உள்ளது. இந்திய சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 226 வது நினைவு நாள் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் அமைந்திருக்கும் வீரபாண்டிய கட்டபொம்மனின் மணிமண்டபத்தில் நடைபெற்றது. அவரது சிலைக்கு ராஜேந்திர பாலாஜி, சண்முகநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராஜேந்திர பாலாஜியிடம், இபிஎஸ் கரூர் விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வருவது கூட்டணி வைப்பதற்காக தான் என்று கேள்வி எழுப்பபட்டது. இதற்கு பதிலளித்த அவர், யாருடனும் கூட்டணி வைக்க தவம் இருக்க வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை உயிரிழந்தவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக தான் எடப்பாடி பேசி வருகிறார். அதிமுக உடன் கூட்டணி வைக்க பிற கட்சிகள் போட்டி போட கூடிய நேரம் விரைவில் வரும் என்றும் தெரிவித்திருந்தார்.
இவரின் இந்த கருத்து விஜய்யை ஆத்திரமூட்டும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விஜய் அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாமா வேண்டாமா என்று தீவிர ஆலோசனையில் உள்ளார். இந்நிலையில் ராஜேந்திர பாலாஜியின் பேச்சு விஜய்க்கும் அதிமுகவுக்கும் உள்ள தூரத்தை இன்னும் அதிகப்படுத்துவது போல உள்ளது என அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.