ரஜினியின் முடிவைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர் செய்த காரியத்தால் பரபரப்பு!

Photo of author

By Sakthi

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி குறித்த முடிவில் இருந்து பின்வாங்கிய நிலையில், அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் எங்களுக்கு டிசம்பர் மாதம் 29ஆம் தேதி கருப்பு தினம் என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.இந்த நிலையில், ரஜினிகாந்தின் ரசிகர் ஒருவர் தன்னுடைய கடையில் ஒட்டப்பட்டிருந்த ரஜினிகாந்தின் சுவரொட்டிகளை கிழித்து எறிந்து எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றார். அந்த ரசிகர் அவரது புகைப்படங்களை கிழிப்பது தொடர்பான காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிப்பது குறித்த தன்னுடைய முடிவிலிருந்து தான் பின்வாங்குவதாக நேற்றைய தினம் அறிவிப்பு வெளியிட்டார்.

இதன் காரணமாக, தமிழகம் முழுவதிலும் இருக்கின்ற அவருடைய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள் இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்த ரஜினி ரசிகரான தக்கலை நீதிமன்றம் எதிரே டீக்கடை வைத்திருக்கும் நாகராஜன் என்பவர் டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி எங்களுக்கு கருப்பு தினம் என்று தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டதோடு, தன்னுடைய டீக்கடையில் ஒட்டப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் தொடர்பான சுவரொட்டிகளை கிழித்து எறிந்தார். சென்ற 12ஆம் தேதி ரஜினிகாந்தின் பிறந்தநாள் அன்று அவருடைய அரசியல் பிரவேசத்தை பிரபலப்படுத்துவதற்காக அவர் வறுமையில் இருந்தாலும் தன்னால் முடிந்த அளவிற்கு அனைவருக்கும் தன்னுடைய டீக்கடையில் இலவச விநியோகம் செய்திருக்கின்றார் நாகராஜன்.

30 வருடங்களுக்கு மேலாக அவர் ரசித்து வரும் ரஜினிகாந்தின் அரசியல் கட்சியை பிரபலப்படுத்துவதற்கு தொடர்ச்சியாக பாடுபட இருப்பதாகவும் தெரிவித்து வந்தார். ஆனாலும் யாரும் எதிர்பார்க்காத வகையில், அரசியல் கட்சி தொடங்கும் முயற்சியை மாற்றிக் கொள்வதாக ரஜினிகாந்த் அறிவித்திருக்கின்ற வகையில் அவர் மிகவும் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றார். இதன்காரணமாக ரஜினிகாந்தின் உருவம் பொறித்த பேனர்கள், மற்றும் சுவரொட்டிகளை கிழித்தெறிந்து தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தி இருக்கின்றார். அது குறித்த புகைப்படங்கள் தற்சமயம் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கின்றது. இது போன்ற அனேக ரசிகர்கள் ரஜினியின் மீது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.