கோலிவுட்டில் முக்கியமான நடிகர் மட்டுமில்லை. சீனியர் நடிகராகவும் இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இப்போதும் சூப்பர்ஸ்டார் என்கிற பட்டம் இவரிடம்தான் இருக்கிறது. ரஜினிக்கு பல வருடங்களாகவே ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு உண்டு. அதனால்தான் 40 வருடங்களுக்கு முன்பே ராகவேந்திரா எனும் படத்தில் நடித்தார்.
அப்போதே அவர் சினிமாவிலிருந்து விலகி முழுக்க முழுக்க ஆன்மிகத்திற்கு சென்றுவிடவும் முடிவு செய்தார். ஆனால், அவரின் முடிவை மாற்றியது இயக்குனர் பாலச்சந்தர்தான். அவர் மட்டும் இல்லையென்றால் ரஜினி இந்நேரம் இமயமலையில் ஒரு சாமியாராகி இருப்பார். ரஜினி எந்த மேடைகளில் பேசினாலும் ஆன்மிக தத்துவம் கொண்ட ஒரு குட்டிக் கதையை சொல்வார். அதுதான் அவர் டிரேட் மார்க். அதில் மனித வாழ்க்கைக்கு தேவையான அறிவுரை இருக்கும்.
அரசியல், ஆன்மிகம் இரண்டிலும் ஆர்வம் கொண்ட ரஜினி தமிழகத்தில் ஆன்மிக அரசியலை கொண்டு வரவும் திட்டமிட்டார். ஆனால், அவர் நினைத்தது நடக்காமல் போய்விட்டது. இந்நிலையில்தான் ஒரு விழாவில் பேசியுள்ள ரஜினி இப்போதுள்ள இளைஞர்களுக்கு கலாச்சார வகுப்பு எடுத்திருக்கிறார்.
இப்போதுள்ள செல்போன் யுகத்தில் நமது இளைஞர்கள் பாரத நாட்டின் கலாச்சாரம் மற்றும் பெருமைகள் பற்றி தெரியாமல் இருக்கிறார்கள். நமது நாட்டின் கலாச்சார பெருமை பற்றிய அறிவில்லாமல் மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றி வருகிறார்கள். மேற்கத்திய நாட்டு மக்கள் அவர்களது கலாச்சாரத்தில் நிம்மதி கிடைக்கவில்லை என சொல்லி இந்தியா வந்து நமது கலாச்சாரத்தை கற்றுக்கொண்டு வாழ ஆசைப்படுகிறர்கள்.. ஆனால், நம் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு அதன் பெருமை பற்றி ஒன்றும் தெரியவில்லை. நமது நாட்டின் உன்னதமான கலாச்சாரம் இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கப்பட வேண்டும்’ என அறிவுரை செய்திருக்கிறார்.