ராஜ்நாத் சிங் அல்லது நிதின் கட்காரி பிரதமராகி இருக்கலாம்! பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சு!
இந்தியாவில் உள்ள தற்பொழுது நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டமாக நடந்து வரும் நிலையில் மேற்குவங்க மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் பிரச்சார பொதுக் கூட்டம் ஒன்றில் ராஜ்நாத் சிங் அல்லது நிதின் கட்காரி இவர்கள் இரண்டு பேரில் ஒருவர் பிரதமராக ஆகி இருக்கலாம் என்று பேசியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் பிரச்சாரம் பொதுக்கூட்டம் என்று களைகட்டி வருகின்றது. அந்த வகையில் மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் மேற்குவங்க மாநிலம் போல்பூர் பாராளமன்ற தொகுதியிலும் துர்காபூரின் பர்தாமன் தொகுதியிலும் பிரச்சாரம் செய்தார்.
போல்பூர் பாராளுமன்ற தொகுதியில் மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் “எந்த ஆண்டிலும் இல்லாத வகையில் இந்த ஆண்டு நாடு முழுவதும் வெப்ப அலை வீசி வருகின்றது. இந்த நேரத்தில் நாடு முழுவதும் 7 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு வருகின்றது.
வழக்கமாக மே 2 அல்லது 3ம் தேதிக்குள் தேர்தல் பணிகள் அனைத்தும் முடிந்து விடும். ஆனால் இந்த ஆண்டு கடுமையான வெயிலுக்கு இடையில் 3 மாதங்களாக தேர்தல் பணிகள் நடைபெற்று வருகின்றது. தேர்தல் கமிஷன் பாஜக கட்சியை திருப்தி படுத்தவே 7 கட்டமான தேர்தலை மூன்று மாதங்களுக்கு நடத்த ஏற்பாடு செய்துள்ளது” என்று பேசினார்.
அடுத்து துர்காபூரின் பர்தாமன் தொகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் “இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதை எந்தவொரு இராணுவ சக்தியாலும் தடுக்க முடியாது என்று இராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் அவர்கள் கூறியுள்ளார். ராஜ்நாத் சிங் அவர்கள் பிரதமர் மோடி அவர்களின் கருணையால் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.
ராஜ்நாத் சிங் அவர்கள் அவருடைய பதவியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு தினமும் வணக்கம் வைக்கிறார். ராஜ்நாத் சிங் அவர்களோ அல்லதுநிதின் கட்காரி அவர்களோ பிரதமராக ஆகி இருக்கலாம். கொஞ்சமாவது மரியாதை தெரிந்தவர்கள் பிரதமர் பதிவியில் இருந்திருந்தால் ஜென்டில்மேன் பதவியில் இருக்கிறார் என்ற திருப்தி கிடைத்திருக்கும்.
ராஜ்நாத் சிங் அவர்களுக்கு ஒன்றை மட்டும் கூறிக் கொள்கிறேன். குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, பொது சிவில் சட்டம் ஆகியவற்றை அமல்படுத்துவதை கட்டாயமாக நாங்கள் எதிர்ப்போம். நீங்கள் எவ்வளவுதான் வலிமையானவர் என்று பார்த்து விடுவோம்” என்று பேசியுள்ளார்.