PMK: பாமகவில் பல்வேறு பிரச்சனைகள் நடந்து வரும் வேளையில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வன்னியர்களுக்கான இடஒதுக்கிடு தொடர்பாக தனது தைலாபுரம் இல்லத்தில் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் வன்னியர்களுக்கான 10.5 % இடஒதுக்கீடு கோரி டிசம்பர் 5ஆம் தேதி போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்திருக்கிறார்.
இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது நமது அறவழி போராட்டங்களை தொடர்ந்து வன்னியர்களுக்கு 10.5 % இடஒதுக்கீடு வழங்கி, சட்டமும் இயற்றப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் அந்த சட்டம் நடைமுறைப்படுத்தபடாமல் தடுத்து, நமக்கான பலன்களை கிடைக்க விடாமல் செய்தனர்.
திமுக அரசின் ஆட்சி காலம் இன்னும் சில மாதங்களில் முடிவடையும் நிலையில் இந்த இறுதி காலக்கட்டத்திலாவது எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றுமாறு வலியுறுத்தினார். வருகின்ற டிசம்பர் 5ஆம் தேதி, காலை முதல் மாலை வரை, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களின் முன்பாக அறவழியில் போராட்டம் நடத்துவதென வன்னியர் சங்கமும், பாட்டாளி மக்கள் கட்சியும் முடிவெடுத்துள்ளது என்று கூறினார்.
இந்த அறவழி போராட்டத்திற்காக 9 குழுக்கள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். பாமகவில் ராமதாசும், அன்புமணியும் வன்னியர்களின் வாக்கையே நம்பியிருக்கும் வேளையில் இந்த போராட்டத்தில் அன்புமணி கலந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் ராமதாஸ் திமுக கூட்டணியில் சேரப்போவதாக தகவல் வெளியான நிலையில் இவர் திமுகவிற்கு எதிராக போராட்டம் நடத்துவது இவர் திமுக கூட்டணியில் இணையவில்லை என்பதை தெளிவாக காட்டுகிறதென கூறப்படுகிறது.