PMK DMK: அடுத்த இரண்டு மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால் அதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கூட்டணி கணக்குகள், தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் வேகமேடுதுள்ள நிலையில், அதிமுக ஒரு வருடத்திற்கு முன்பே பாஜக உடன் கூட்டணி அமைத்து விட்டது. அடுத்ததாக எந்த கட்சியை கூட்டணியில் சேர்க்கலாம் என்று அதிமுக ஆலோசித்து வந்த சமயத்தில் இரு தினங்களுக்கு முன்பு பாமகவில் அன்புமணி தரப்பு அதிமுக உடன் கூட்டணி அமைத்துள்ளதாக கூறி பகீர் கிளப்பியது. இதனால் ஆத்திரமடைந்த ராமதாஸ் தரப்பு, தனிக்கட்சி ஆரம்பிக்க போவதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
தேர்தல் நெருங்கும் சமயத்தில் பாமகவில் தந்தைக்கும், மகனுக்கும் ஏற்பட்டுள்ள தலைமை பிரச்சனை தற்போது வரை தீர்ந்த பாடில்லை. இதனால் பாமக இரண்டாக பிரிந்துள்ளது. மேலும் பாமகவின் கூட்டணி உறுதியாகமலேயே இருந்து வந்தது. இந்நிலையில், அன்புமணி அதிமுக பக்கமும், ராமதாஸ் திமுக பக்கமும் ஆதரவு தெரிவித்து வந்தனர். பாமகவின் அதிகாரம் தம் கையில் தான் உள்ளது என்று இரு தரப்பும் கூறி வர, அன்புமணி அதிமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வருவதை ராமதாஸ் ஆரம்பத்திலேயே எதிர்த்து வந்தார்.
இந்நிலையில் ராமதாஸின் சம்மதம் இல்லாமல் அன்புமணி அதிமுக உடன் கூட்டணி அமைத்தால் விரக்தியடைந்த ராமதாஸ் தனிக்கட்சி தொடங்கி, திமுக உடன் கூட்டணி அமைக்க போவதாக தகவல் கசிந்துள்ளது. பெரும்பாலான வன்னியர் சமுதாய வாக்குகளை ராமதாஸ் தன் கையில் வைத்திருப்பதால் ராமதாசின் சேர்க்கை திமுகவிற்கு பலமாக அமையுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.