PMK: பாமகவில் அன்புமணிக்கும் ராமதாஸிற்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து கட்சியின் தலைமை பதவி அன்புமணிக்கு தான் என தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்கியது. இதனால் பாமக நிர்வாகிகளும்,தொண்டர்களும் யார் பக்கம் நிற்பதென்று தெரியாமல் திணறுகின்றனர். இந்நிலையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் காரில் பாமக கட்சி கொடி இல்லாதது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வழக்கமாக அவர் எங்கு சென்றாலும், காரில் கட்சிக்கொடியுடன் செல்வார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால், இன்று ராமதாஸ் காரில் பாமக கொடி இல்லாமல் இருப்பது தொடர்பாக சிலர் கேள்வி எழுப்பினர்.அதற்கு பதிலாக அவர் வன்னியர் சங்க கொடியை வைத்திருந்தார். இதனால் “கொடியை மாற்றியது ஏன்?” என்ற விவாதம் கிளம்பியது.
முன்னதாக பாமக தலைவர் யாரென விவாதம் எழுந்த நிலையில் அதற்கு அன்புமணி தலைவர் என தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததாக ஒரு கடிதத்தை வெளியிட்டு புயலை கிளப்பியிருந்தனர். இந்நிலையில் ராமதாஸ் காரில் கட்சி கொடி இல்லாதது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை உண்டாக்கியது.
இது குறித்து விளக்கம் அளித்த ராமதாஸ் வன்னியர்களின் இட ஒதுக்கீட்டிற்க்கு போராடிய தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கட்சி கொடியை மாற்றியதாக கூறினார். 1987 செப்டம்பர் 17 ஆம் தேதி வன்னியர்களுக்கான வேலை வாய்ப்பு மற்றும் கல்வி போன்றவற்றிக்கு 20% இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடைபெற்றது. இதில் ராமதாஸ் தலைமை தாங்கினார். மேலும் பல்வேறு போராட்டங்களுக்கும் அவர் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் தியாகிகளின் நினைவாக தான் இன்று கட்சி கொடியை மாற்றியதாக உறுதிப்படுத்தியுள்ளார்.