ராமேஸ்வரம் ஆலயத்தில் இந்த வருடத்தின் ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. திருவிழாவில் நாள்தோறும் அம்பாள் பல வாகனங்களில் மூன்றாம் பிரகாரத்தில் வலம் வருவது வழக்கம். அதேபோல நோய்த்தொற்று தடுப்பு கட்டுப்பாடு காரணமாக, கோவிலுக்குள் பக்தர்கள் செல்வதற்கு விதிக்கப்பட்டு இருக்கின்ற தடை காரணமாக, பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தடுப்பதற்காகவும், திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்துமே கோவிலுக்குள்ளேயே நடைபெற்று வருகின்றது.
இந்தநிலையில், ராமேஸ்வரம் கோவிலில் நடந்து வரும் ஆடி திருவிழாவின் பத்தாவது தினம் மற்றும் ஆடிப்பூரத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை பர்வதவர்த்தினி அம்பாள் முத்தங்கி சேவை அலங்காரத்தில் தங்கப் பல்லக்கில் எழுந்தருளி மூன்றாம் பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதனை தொடர்ந்து சிவ தீர்த்தத்தில் அம்பாள் தீர்த்தமாடும் நிகழ்ச்சியும் நடந்தது அதோடு தீபாராதனையும் நடைபெற்றது.
இந்த திருவிழாவின் பதினோராவது நிகழ்ச்சியாக நேற்றைய தினம் பகல் 3 மணி அளவில் தொடங்கி 4 மணி வரை சுவாமி அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியானது நடைபெற்றது. கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் வைத்து இந்த நிகழ்வு நடந்திருக்கிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்றைய தினம் இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் திருக்கல்யாண மண்டபத்தில் வைத்து ராமநாதசுவாமி பர்வத வர்த்தினி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற இருக்கின்றன. வழக்கமாக ஆடி திருக்கல்யாண திருவிழாவின் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி ராம தீர்த்தம் பகுதியில் அமைந்திருக்கின்ற தபசு மண்டபத்தில் வைத்துதான் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் இந்த வருடம் நோய்த்தொற்று பரவல் கட்டுப்பாடு இருப்பதால் தபசு மண்டகப்படியில் மாலை மாற்றும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக கோவிலுக்குள்ளேயே நடத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.