அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று டெல்லி சென்று பாஜக மூத்த தலைவர்களை சந்திக்கிறார் என்கிற செய்தி வெளியான போதே தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. ஏனெனில், பாஜகவுடன் இனிமேல் கூட்டணி இல்லை என 2 வருடங்களுக்கு முன்பே அதிமுக திட்டவட்டமாக அறிவித்தது. ஆனால், சமீபகாலமாக எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சில் மாற்றம் தெரிந்தது.
‘வருகிற சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பீர்களா?’ என சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்கள் கேட்டதற்கு ‘தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. அப்போது முடிவெடுப்போம்’ என சொன்னாரே தவிர ‘பாஜகவுடன் கூட்டணி இல்லை ஏற்கனவே சொல்லிவிட்டோம்’ என அவர் சொல்லவில்லை. அதோடு, கொள்கை வேறு.. கூட்டணி வேறு என்றும் பேசியிருந்தார். எனவே, அதிமுக – பாஜக கூட்டணி உறுதி என பலரும் நினைத்தார்கள்.இந்த நிலையில்தான் நேற்று காலை அவசரமாக டெல்லி புறப்பட்டு சென்றிருக்கிறார்.
நேற்று இரவு 8.30 மணியளவில் அமித்ஷாவின் வீட்டிற்கு சென்றார் பழனிச்சாமி. அவருடன் தம்பி துரை, வேலுமணி, சண்முகம் மற்றும் கேபி முனுசாமி ஆகியோர் இருந்தனர். சுமார் 2 மணி நேரம் அவர்கள் ஆலோசித்தார்கள். என்ன பேசினார்கள் என்பது தெரியவில்லை என்றாலும் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்தியே ஆகவேண்டும் என்பதே சந்திப்பின் சாரம்சம் என டெல்லி பத்திரிக்கையாளர்கள் சொல்கிறார்கள்.
டெல்லி விமான நிலையத்தில் இருந்து அதிமுக அலுவகத்திற்கு செல்ல இன்னோவா கார், அமித்ஷாவை சந்திக்க செல்லும்போது ஆடி கார், இரண்டு மணி நேர சந்திப்பை முடித்துவிட்டு வெளியே வந்து பெண்ட்லி காரை பயன்படுத்தி இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இவ்வளவு சீக்ரெட்டாக எதற்காக சந்திப்பை நடத்தினார் என்பது தெரியவில்லை.
மொத்தத்தில் டெல்லியில் நடந்த அமித்ஷா – பழனிச்சாமி சந்திப்பு வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியை உறுதி செய்திருக்கிறது. இந்த முறை பாஜகவுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்படும் எனவும் சொல்லப்படுகிறது.