பிரபல திரைப்பட நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பு பாஜகவில் இணைய இருப்பதாக தொடர்ச்சியாக கிளம்பிய சர்ச்சையை அடுத்து அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் என்ற பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இந்நிலையில், காங்கிரஸின் தலைமையில் இருந்து இந்த அறிவிப்பானது வெளியான ஒரு சில நிமிடங்களில் நடிகை குஷ்பூ காங்கிரஸின் தேசியத் தலைமைக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.
அக்கடிதத்தில் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தான் விடுபட விரும்புவதாக அவர் கூறியிருக்கிறார். கட்சி தன்னை விலக்கி வைக்கிறது என்றும், அந்த கடிதத்தில் தன் ஆதங்கத்தை பதிவு செய்திருக்கிறார்.
நடிகை குஷ்புவின் இந்த முடிவானது, அவருடைய தனிப்பட்ட சில பிரச்சினைகளிலிருந்து தப்பிப்பதற்காக தான் என்று பரவலாக கூறப்படுகிறது. அவர் திரை உலகில் ஒரு பிரபலமான நடிகை என்பதை தவிர்த்து, அவருடைய செயல்பாடுகளுக்காக அவருக்கு காங்கிரஸ் கட்சியில் பெரிதாக அங்கீகாரம் எதுவும் வழங்கப்படவில்லை.
பாரதிய ஜனதாவில் கடுமையாக உழைத்தால் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதற்கான பலன் கிடைக்கும் என்று அவர் நினைத்திருக்கலாம். அப்படி அவர் நினைத்தாலும், இதற்கு வேறு சில தனிப்பட்ட காரணங்கள் கூறப்படுகின்றன. சொத்துகுவிப்பு வழக்கு குஷ்பூவை துரத்துவதாகவும், இதனால் பாஜக அவருக்கு நெருக்கடி கொடுத்து டீல், பேசி கட்சியில் அவரை இணைத்ததாகவும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தன்னை காத்துக் கொள்வதற்காகவே குஷ்பூ பாஜகவுக்கு அடிபணிந்தார் என்று கூறப்படுகிறது.