தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடியை அடுத்துள்ள மாருதி நகர் பகுதியை சார்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவர் கட்டிட ஒப்பந்ததாரராக (கான்ட்ராக்டர்) பணியாற்றி வரும் நிலையில், இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் இரட்டை மகள்கள் இருக்கின்றனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை காலை நேரத்தில் இரு மகள்களான பத்மபிரியா மற்றும் ஹரிப்பிரியா மாடியில் இருக்கும் அறைக்கு ஆன்லைன் வகுப்பு உள்ளதாக கூறிவிட்டு சென்றனர்.
தந்தை பாலசுப்பிரமணியம் வெளியே சென்ற நிலையில் அவரது மகன் வீட்டில் இருந்தார்.தனது இரு சகோதரிகளும் வெகுநேரமாகியும் கீழே வராததால் பாலசுப்பிரமணியம் மற்றும் அவரது மகன் மேலே சென்று பார்த்தனர்.அப்பொழுது இரண்டு பெண்களும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் பெற்றோர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், தாய் – தந்தை இருவரும் அடிக்கடி அடிக்கடி சண்டை போடுவதால் மன உளைச்சலுக்கு ஆளாகி இரு பெண்களும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
தாய் தந்தையரின் சண்டை குழந்தைகளுக்கு எந்த அளவுக்கு மன அழுத்தத்தை தருகிறது என்று இந்த சம்பவம் எடுத்துக்காட்டாக அமைகிறது.
கணவன் மனைவிக்கு இடையில் கருத்து வேறுபாடு இருப்பின் அது குழந்தைகள் இல்லாத பின்பு பேசி சரி செய்துக் கொள்வது அவர்களின் மகிழ்ச்சிக்கும் எதிர்காலதிற்கும் பாதுகாப்பானதாக இருக்கும்.

