சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் முக்கிய தலைவர்களின் பிறந்த நாள் உள்ளிட்ட நாட்களில் நீண்ட நாட்களாக சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகளுக்கு நன்னடத்தை அடிப்படையில் விடுதலை வழங்கும் நடைமுறை இருந்து வருகிறது.
கைதிகளின் நன்னடத்தை, ஒழுங்குமுறை உள்ளிட்டவற்றை சிறையின் கண்காணிப்பாளர் உன்னிப்பாக கவனித்து அதுதொடர்பாக சிறைத் துறைக்கு அறிக்கை வழங்குவார். சிறைத்துறை அதனடிப்படையில் ஒருசில முடிவுகளை மேற்கொள்ளும். அதாவது கைதிகளின் நன்னடத்தை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு நீண்ட நாட்களாக சிறையில் இருக்கும் ஒரு சிலரை இதுபோன்ற தினங்களில் முன்கூட்டியே விடுதலை செய்யும் நடைமுறை இருந்து வருகின்றது.
இந்த சூழ்நிலையில், அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு நேற்று ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டிருக்கிறது.
அதில் தெரிவித்திருப்பதாவது, பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக சிறைகளில் 10 ஆண்டுகள் மற்றும் 20 வருடங்கள் தண்டனை முடிந்தும் இதன் கீழ் பயன் பெற இயலாத ஆயுள் தண்டனை சிறைவாசிகள் மற்றும் வயது முதிர்ந்த மற்றும் உடல்நலம், மனநலம், பாதிக்கப்பட்டு சிறையில் இருப்பவர்கள் ,மாற்றுத்திறனாளி சிறைவாசிகள், உள்ளிட்டோர் நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமானத்தின் அடிப்படையில் நடைமுறையில் இருக்கின்ற சட்டம் மற்றும் விதிகளின் அடிப்படையில் அவர்களை முன் விடுதலைக்கு உரிய பரிந்துரை வழங்க சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையின்கீழ் ஆறு பேர் கொண்ட குழு அமைக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார்.
இந்த குழுவில் மனநல மருத்துவ இயக்குனர், மருத்துவ கல்வி இயக்குனர், சிறைத்துறை தலைமை நன்னடத்தை அலுவலர், உளவியலாளர் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற மூத்த வழக்கறிஞர் என்று ஐந்து உறுப்பினர்களும், சிறை மற்றும் சீர்திருத்தத் துறையில் துணை தலைவர் பதவி நிலையில் இருக்கின்ற ஒரு அலுவலர் உறுப்பினர் செயலராகவும் அங்கம் வகிப்பவர்கள் உள்ளிட்டோர் இந்தக் குழுவில் இடம் பெற்று இருக்கிறார்கள் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.