தமிழக அரசு டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கடந்த பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி அறிவித்தது. தற்போது தமிழ்நாடு அரசு உத்தரவின் பெயரில்,வேளாண் துறைச் செயலர் ககன்தீப்சிங் பேடி அரசாணையை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:
கடந்த பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி உருவாக்கப்பட்ட, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் மேம்பாடு சட்டத்திற்கான வரைவு விதிகளை வேளாண் துறை இயக்குனர் தமிழக அரசிற்கு அனுப்பி இருந்தார்.தற்போது இந்த விதிகளை பரிசீலித்து அவற்றை அமல்படுத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
இந்த விதிகளின் படி,ஆண்டுதோறும் மார்ச் மாதம் இறுதிக்குள்,வேளாண் மேம்பாடு வேளாண் மண்டல பாதுகாப்பு தொடர்பாக,வேளாண் பொறியியல் துறையுடன் ஆலோசனை நடத்தி விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து, வேளாண் மண்டலத்திற்கான ஆணையத்திடம் அளிக்க வேண்டும்.
மேலும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் பகுதியில்,நிலம் நீர் சுற்றுச்சூழல் ஆகியவற்றின் பாதுகாப்பு,வேளாண் மண்டலத்தில் மேலும் சேர்க்கப்பட வேண்டிய பகுதிகள்,விவசாயிகளின் வாழ்வாதாரம்,வேளாண் தொழில் பிரிவுகள் உள்ளிட்டவை தொடர்பான பரிந்துரைகளை ஆணையம் வழங்கும்.இந்த ஆணையத்திற்கு உதவ வேளாண் துறை செயலர் தலைமையில் தொழில்நுட்ப குழு அமைக்கப்படும் என்றும்,இந்தக் குழுவின் மூலம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சேர்க்க வேண்டியவை மற்றும் நீக்க வேண்டியவை குறித்தும் ஆலோசனை வழங்கப்படுமென்றும் அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.