சாலைகளை பெயர்த்தெடுக்காமல் புதிய சாலைகள் போட்டால் புகார் தெரிவிக்கவும்! வெளியான புதிய உத்தரவு!
பெருநகரமான சென்னை மாநகராட்சியில் ஒரு திடீர் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதில் பெருநகர சென்னை மாநகராட்சி 387 கிலோ மீட்டர் நீளம் உள்ள 471 போக்குவரத்து சாலைகளும், 5270 கிலோ மீட்டர் நீளமுள்ள 34640 உட்புற சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த சாலைகளில் நாள்தோறும் தூய்மைப் பணியாளர்கள் மூலம் துப்பரவு பணிகளும் நடைபெறுகின்றன.
மேலும் சேதமடைந்த சாலைகளை கண்டறிந்து சீரமைத்து சரி செய்தல் போன்ற பல்வேறு பணிகள் மாநகராட்சி மூலம் எப்போதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், சர்தார் வல்லபாய் பட்டேல் சாலையில் 1.08 கி.மீ. நீளத்தில் ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நேரிடையாக பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டு உள்ளார்.
மேலும், சாலைப் பணிகளை மேற்கொள்ளும்போது பழைய சாலைகளை முழுவதுமாக அகழ்ந்தெடுத்து அதாவது பிரித்தெடுத்து புதிய சாலைப் பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதன் மூலம் சாலை உயரம் அதிகரிப்பது தடுக்கப்படுகிறது. மேலும், சாலையோரமுள்ள குடியிருப்புகள் மற்றும் கட்டிடங்களில் பருவ மழைக் காலங்களில் மழை நீர் உட்புகாமல் தடுக்கப்படுகிறது.