அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு அதனடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்குவதை உறுதி செய்யும் விதத்தில் உயர்மட்ட குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருக்கின்ற அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீட்டினடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்குவதை உறுதி செய்திடும் விதத்தில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டிருக்கிறது மாற்றுத்திறனாளிகள் துறை செயலாளர் மற்றும் தலைவராகவும், தொழிலாளர் நலத்துறை மனிதவள மேலாண்மை துறை செயலாளர்கள், உட்பட 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
இந்த உயர்மட்ட குழுவானது எல்லா அரசுத்துறைகள், அரசு சார்ந்த நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், கழகங்கள், வாரியங்கள், கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், உள்ளிட்டவற்றில் வழங்கப்படும் வேலை வாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவதை கண்காணிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்கள் மாற்றுத் திறனாளிகளை கொண்டு நிரப்பப்படாத பட்சத்தில் பணியிடங்கள் அடுத்த வருடத்திற்கு முறையாக முன்கொணரப்பட்டு செயல்படுத்தப்படுகின்றனவா? என்பதையும் இந்த குழுவானது கண்காணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் பணியாற்ற உகந்த பதவி இடங்கள் கண்டறிபடுவதையும், 3 வருடங்களுக்கு ஒரு முறை மறு ஆய்வு செய்யப்படுவதையும், இந்த குழு கண்காணிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.