மருத்துவ படிப்புக்காக தமிழக OBC பிரிவு மாணவர்களுக்கான 50% இடஒதுக்கீடு அளிக்க கோரி தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த விவகாரம குறித்து இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் தமிழக அரசின் உயர் கல்வித் துறை அதிகாரிகள் அடங்கிய குழு முடிவெடுக்கவும், அடுத்த கல்வியாண்டிலிருந்து 50% இடஒதுக்கீட்டை அமல்படுத்தவும் உத்தரவிட்டது.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கினை மேல்முறையீடு செய்தது.
தமிழக அரசின் மனுவில், மருத்துவ படிப்புக்காக தமிழகத்தால் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில், தமிழக OBC பிரிவு மாணவர்களுக்கான 50% இடஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்த வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு முன்
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர்கள் யோகேஷ் கண்ணாவும், வி.கிரியும்,திமுக சார்பில் வழக்கறிஞர் வில்சனும் ஆஜராகினர்.
திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், இட ஒதுக்கீடு தொடர்பாக இறுதி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த குழு தொடர வேண்டும் என தனது வாதத்தை முன்வைத்தார்.
இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்துக்கொண்ட நீதிபதிகள், மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் குழுவும், தமிழக அரசின் மனு தொடர்பாக 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டனர்.