அன்னக்கிளி படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைக்க துவங்கியவர் இளையராஜா. குறுகிய காலகட்டத்தில் மிகவும் அதிகமான படங்களுக்கு இசையமைத்தவர் இவர். தமிழகத்தில் ஹிந்தி பாடல்களின் தாக்கம் அதிகமாக இருந்த காலத்தில் அதை மாற்றி தமிழ் பாடல்களை கேட்க வைத்தவர் இவர். 70,80களில் பிறந்தவர்கள் இப்போதும் இளையராஜாவின் பாடல்களுக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள்.
ஒருபக்கம், அவரின் பாடல்களை திரைப்படங்களிலும் பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், அப்படி பயன்படுத்தப்படும்போது தன்னுடைய அனுமதி வாங்க வேண்டும். இல்லையேல் நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும் என தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பி வருகிறார் இளையராஜா. மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் குணா படத்தில் இடம் பெற்ற கண்மணி பாடல் பயன்படுத்தப்பட்டதற்கும் ராஜா நோட்டீஸ் அனுப்பியிருந்தார். தற்போது குட் பேட் அக்லி பட தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.
இந்த படத்தில் தன்னுடைய அனுமதி இல்லாமல், ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்சள் குருவி, இளமை இதோ இதோ போன்ற பாடல்களை குட் பேட் அக்லி படத்தில் பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பு நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். 5 கோடி நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும், படத்தில் தன்னுடைய பாடல்களை பயனடுத்துவதை நிறுத்தவேண்டும் எனவும், 7 நாட்களுக்குள் படக்குழு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

ஆனால், இளையராஜாவின் நோட்டீஸுக்கு விளக்கமளித்துள்ள குட் பேட் அக்லி பட நிறுவனம் ‘காப்புரிமை வைத்திருக்கும் சம்பந்தப்பட்ட நிறுவங்களிடம் அனுமதி வாங்கியே குட் பேட் அக்லி படத்தில் பாடல்களை பயன்படுத்தி இருக்கிறோம். முறையாக என்.ஓ.சி வாங்கியிருக்கிறோம்’ என விளக்களித்துள்ளனர்.
இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் ‘என்னட்ட இன்னும் ஆரம்பிக்கலையேன்னு பார்த்தேன். பாடல்களின் உரிமை தயாரிப்பாளர்களிடம்தான் இருக்கிறது. இளையராஜா சம்பளம் வாங்கி கொண்டுதான் படத்திற்கு இசையமைத்தார். இப்போது காப்புரிமை கேட்கிறார் எனில் அவர் வாங்கிய சம்பளத்தை திருப்பி கொடுக்க வேண்டும்’ என கருத்து கூறியிருக்கிறார்.