தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்திருக்கின்ற நிலையில், வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டுள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இருக்கிறது. வடக்கு இலங்கையை மையம் கொண்டுள்ள இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று கடலூர் மற்றும் பாம்பன் இடையே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வரும் 13ம் தேதிவரையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரங்களுக்கான மழைப்பொழிவு தொடர்பாக ஆய்வு மையம் கணித்திருக்கிறது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது. கணமழை காரணமாக, தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.