பல நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக நாளை திருச்சி வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

0
89

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நாளை திருச்சிக்கு வருகை தர இருக்கிறார் அவர் பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவுபெற்ற பணிகளை தொடங்கி வைத்தும், பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், வழங்க இருக்கிறார். இதற்கான பிரமாண்ட விழா திருச்சி கேர் கல்லூரி வளாகத்தில் நாளை மாலையில் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு கல்லூரி வளாக மைதானத்தில் மேடை பந்தல் அமைக்கப்பட்டு விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் கடந்த சில நாட்களாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் பங்கு பெறுவதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக இன்று மாலை திருச்சி வருகை தருகிறார். திருச்சியிலிருந்து கார் மூலமாக தஞ்சை செல்லும் அவர் தஞ்சையில் இரவு ஓய்வெடுக்கிறார், அதன் பிறகு அவர் நாளை காலை தஞ்சையில் நடைபெறும் விழாவில் பங்கேற்க இருக்கிறார், அதன் பிறகு மதியம் தஞ்சாவூரிலிருந்து அவர் கார் மூலமாக திருச்சிக்கு வருகை தருகிறார் என்று சொல்லப்படுகிறது.

திருச்சி சுற்றுலா மாளிகையில் ஓய்வெடுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் மாலை விழா நடைபெறும் கேர் கல்லூரிக்கு வருகை தருகிறார். அங்கு நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று விட்டு திருச்சி மாவட்டத்தின் பல வருடகாலமாக முக்கிய கனவு திட்டமான ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டுதல், உட்பட ஒட்டுமொத்தமாக 604 கோடியே 10 லட்சம் மதிப்பிலான புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்ட இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இதனை அடுத்து திருச்சி மாவட்டத்தில் சத்திரம் பேருந்து நிலையம், கால்நடை மருந்தக கட்டிடங்கள், மாணவிகளுக்கான தங்கும் விடுதிகள், திருச்சி கே கே நகர் ஆயுதப்படை வளாகத்தில் ரைபிள் கிளப், மலைக்கோட்டை ஒளிரும் மின் விளக்குகளுடன் அழகுபடுத்தும் பணிகள், தரம் உயர்த்தப்பட்ட தார் சாலை பணிகள், மருங்காபுரி மாற்றத்திற்கான ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம், மன்னார்புரம் மண்பரிசோதனை ஆய்வகம், தமிழக நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் நாகமங்கலம் ஓடை துறையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம், உள்ளிட்ட 153 கோடியே 22 லட்சம் மதிப்பிலான முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க இருக்கிறார்.

அதோடு அவர் 28 அரசு துறைகளின் மூலமாக 45 ஆயிரத்து 344 பயனாளிகளுக்கு ரூபாய் 327 கோடியே 40 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், வழங்க இருக்கிறார். இந்த விழாவில் ஒட்டுமொத்தமாக 1084 கோடியே 80 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளை ஆரம்பித்து வைத்து நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகிறது.

முதலமைச்சர் ஸ்டாலின் திருச்சிக்கு வருகை தருவதால் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்டோர் உற்சாகமடைந்த இருக்கிறார்கள். முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

Previous articleஇனி மாற்றுத்திறனாளிகளும் கடல் அலைகளை ரசிக்கலாம்! சென்னை மாநகராட்சி நிர்வாகம் செய்த சூப்பர் ஏற்பாடு!
Next articleபிரதமரை வரவேற்க தயாராகும் தமிழக அரசு! பாஜக திமுக கூட்டணி ஏற்பட இருக்கிறதா?