ரூ.65 கோடி செலவிடப்படாமல் அரசுக்கு திரும்பி சென்ற அவலம்! எம்பியிடம் புகார்
விவசாயிகள் இலவச மின் இணைப்பு பெற 7 ஆண்டுகள் வரை காத்திருப்பு,அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகள் அறிந்து கொள்ளாதது வருத்தமளிக்கிறது என எம்.பி கார்த்தி சிதம்பரம் வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஊராட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.65 கோடி செலவிடப்படாமல் அரசுக்கு திரும்பி சென்றதாக சிவகங்கையில் நடந்த மாவட்ட கண்காணிப்பு, விழிப்பு கூட்டத்தில் குற்றச்சாட்டு எழுந்தது.சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பு மற்றும் விழிப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது.
கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மாங்குடி, செந்தில்நாதன், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், உதவி திட்ட அலுவலர் செல்வி, மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்மணிபாஸ்கரன் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் ‘இன்ப்ளூயன்ஸ்’ காய்ச்சல் பரவலை தடுக்க 168 இடங்களில் சிறப்பு முகாம் நடத்தப்படும். எடைகுறைவாக பிறக்கும் குழந்தைகளை கணக்கெடுத்து அவர்களுக்கு சத்தான உணவு வழங்க வேண்டும். விவசாய மின் இணைப்பிற்கு விண்ணப்பித்த 840 பேரில் 460 பேருக்கு இணைப்பு தந்துள்ளனர்.
விவசாயிகள் இலவச மின் இணைப்பு பெற 7 ஆண்டுகள் வரை ஏன் காத்திருக்க வைக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினர். கச்சா வீடு திட்டத்தில் 4402 கட்ட இலக்கு நிர்ணயித்து 3,544 கட்டுவதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளது. இதில் 1,215 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. வேலை உறுதி திட்டத்தில் 2.26 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.
வனத்துறை தலையீட்டால் கிராமங்களில் இணைப்பு சாலை பணிகளே நடக்கவில்லை. ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்ட நிதி செலவிடப்படாமல் ரூ.65 கோடி வரை அரசுக்கு திரும்பி சென்றதால் வளர்ச்சி பணிகள் பாதித்துள்ளது.
மத்திய அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகள் எடுத்துரைத்தனர். இந்நிலையில் அந்த திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து எம்.பி கார்த்தி சிதம்பரம் உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் கருத்து கேட்ட நிலையில் அதுகுறித்து உள்ளாட்சி பிரதிநிதிகள் பதிலளிக்கவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த கார்த்தி சிதம்பரம் அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகள் அறிந்துகொள்ளாமல் இருப்பது மிகவும் வருத்தமளிப்பதாகவும், அதனை முழுமையாக உள்ளாட்சி பிரதிநிதிகள் தெரிந்து கொண்டால் மட்டுமே மக்களிடம் கொண்டு செல்ல முடியும் என தெரிவித்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.