மத்திய அரசின் வழிகாட்டுதலினடிப்படையில் ஆதார் எண் பதிவு செய்த விவசாயிகளுக்கு மட்டுமே 2000 ரூபாய் நிதி வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக வேளாண் உற்பத்தி ஆணையர் வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் தமிழகத்தில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் மத்திய அரசின் 100 சதவீத பங்களிப்புடன் கடந்த 2019 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் மூலமாக 4 மாதத்திற்கு ஒருமுறை தலா 2000 ரூபாய் வீதம் ஒரு வருடத்திற்கு 6000 ரூபாய் 3 தவணைகளில் சொந்தமாக விவசாய நிலம் வைத்திருக்கின்ற விவசாய குடும்பங்களுக்கு உதவித் தொகையாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது என சொல்லப்பட்டுள்ளது.
அந்த விதத்தில் இதுவரையில் 38.24 லட்சம் விவசாயிகளின் வங்கி கணக்கில் 11 தவனைகளாக நேரடி மானியமாக வரவு வைக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது மத்திய அரசு 12 வது தவணைத் தொகையை விடுவிப்பதில் சில புதிய வழிமுறைகளை தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் ஆகஸ்ட் மாதம் முதல் விடுக்கப்படும் அனைத்து தவணை தொகைகளும் பயனாளியின் ஆதார் எண் அடிப்படையில் மட்டுமே நிதி விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பிரதான் மந்திரி கிசான் திட்ட பயனாளிகள் எல்லோரும் www.pmkisan.gov.in என்ற இணையதளத்தில் உங்களுடைய ஆதார் எண்ணை உள்ளீடு செய்து ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசிக்கு வரும் ஓடிபியை பெற்று அதனை பதிவு செய்து ஆதார் எண்ணை உறுதி செய்து கொள்ளலாம் என சொல்லப்படுகிறது.
இல்லையென்றால், அருகில் இருக்கக்கூடிய பொது சேவை மையங்களில் தங்களுடைய விரல் ரேகையை பதிவு செய்தும், இந்த வலைதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்து கொள்ளலாம்.
அடுத்த தவணைத் தொகையானது இந்த அதிகாரப்பூர்வ வலைதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்த பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என மத்திய அரசு கூறியிருக்கிறது.
ஆகவே இதுவரையில் இந்த பிரதான் மந்திரி கிசான் வலைதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்யாத பயனாளிகள் எல்லோரும் நிச்சயமாக ஆதார் எண்ணை புதுப்பித்துக் கொண்டு தொடர்ந்து பயனடையுமாறு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.