மனு கொடுக்க வந்தவர்களிடம் சாப்பிட்டு போக பணம் கொடுத்து அனுப்பிய பாமக எம்.எல்.ஏ! குவியும் பாராட்டு
சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதியில் பாமக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தான் அருள். இவர் இந்த தொகுதியில் மட்டுமல்லாமல் சேலம் மாவட்டம் முழுவதும் மக்கள் மத்தியில் ஓரளவு செல்வாக்கை பெற்றவர்.பொது மக்கள் மத்தியில் எளிமையாக பழக கூடியவர் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்று கொண்ட பின்னர் தொகுதி முழுவதும் சென்று மக்களின் குறைகளை கேட்டு அவற்றை நிவர்த்தி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த தன் தொகுதி மக்களுக்கு பணம் கொடுத்து சாப்பிட்டு செல்லும் படி கூறியது மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.
புதிதாக பதவி ஏற்றுள்ள திமுக அரசு அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை செய்து வருகிறது.அதன் அடிப்படையில் சேலம் மேற்கு தொகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள குடியிருப்புகளை அகற்றும் பணியை மாவட்ட நிர்வாகம் ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடியிருப்புகளை அகற்ற கூடாது என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் கலந்து கொண்டு மனு அளித்துள்ளனர்.அப்போது அங்கு வந்த சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ அருள் குடியிருப்புகளை அகற்றாமல் இருக்க நடவடிக்கை எடுக்க சொல்வதாக அங்கு வந்திருந்த மக்களிடம் உறுதி அளித்தார்.மேலும் அவர்களிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து சாப்பிட்டு செல்லும் படி உபசரித்து அனுப்பியது அங்கு கூடியிருந்த மக்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொகுதி மக்களை சந்திக்கவே மறுக்கும் எம்.எல்.ஏ க்கள் மத்தியில் மனு அளிக்க வந்தவர்களுக்கு சாப்பிட பணம் கொடுத்து அனுப்பிய இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மக்கள் மத்தியில் இவருக்கு பாராட்டும் குவிந்து வருகிறது.