ADMK: அடுத்த வருடம் தமிழகத்தில் நடக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் ஆர்வமாக உள்ளது. திராவிட கட்சிகளான அதிமுகவும், திமுகவும் வழக்கம் போல தங்களது பணியை மும்முரமாக செய்து வருகின்றன. 2021 சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியடைந்த அதிமுக இந்த முறையாவது வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டுமென பல்வேறு முயற்சிகளை செய்துவருகிறது. இதற்காக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்பயணத்தை தொடங்கிய இபிஎஸ், முதல் ஆளாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் பணியையும் தொடங்கி விட்டார்.
இவ்வாறான நிலையில் தான் அதிமுகவில் பல்வேறு பூகம்பங்கள் வெடித்துள்ளன. ஓபிஎஸ், தினகரன், சசிகலா போன்றோர் இபிஎஸ்யால் அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், மீண்டும் இணைய வேண்டுமென கூறி வருகின்றனர். இவர்கள் மூவரும் இபிஎஸ்க்கு எதிராக இருப்பதால், மீண்டும் கட்சியில் சேர்த்தால் தனது தலைமைக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயத்தினால் இபிஎஸ் ஒருங்கிணைப்பது நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் உள்ளார்.
இந்நிலையில் நேற்று தமிழகம் வந்த தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல், அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து இபிஎஸ்யிடம் பேசிய போதும் கூட அவர் இதற்கு இறங்கி வரவில்லை என்று தகவல் கிடைத்தது. இந்த இக்கட்டான சூழலில் தான், அரசியலிலிருந்து சற்று ஒதுங்கியே இருந்த சசிகலாவை அதிமுகவில் சேர்க்க இபிஎஸ் சம்மதம் தெரிவித்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனை சசிகலா செய்தியாளர்கள் சந்திப்பில் உறுதிப்படுத்தியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த சட்டமன்ற தேர்தலை உறுதியாக சந்திப்பேன் என்றும், அதிமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய போவதாகவும் தெரிவித்தார். இவரின் இந்த அறிவிப்பு எடப்பாடி பழனிசாமி சசிகலாவை அதிமுகவில் சேர்க்க சம்மதம் தெரிவித்துவிட்டார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. தினகரன் மற்றும் ஓபிஎஸ் இருவருடனும் சசிகலா பேசிவருவதால், இவர்கள் மூவரும் ஒன்றிணைவதை தடுக்க இபிஎஸ் இந்த முயற்சியை கையில் எடுத்துள்ளார் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். சசிகலாவின் ரீ என்ட்ரி அதிமுகவில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.