காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இருந்தால் இந்த படுகொலையை தடுத்திருக்கலாம்! சத்யாவின் உறவினர் ஆவேசம்!

Photo of author

By Sakthi

மாணவி சத்யபிரியா படுகொலை சம்பவம் அவருடைய குடும்பத்தினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மாணவி சத்யாவின் தாயார் காவல்துறையில் தலைமை காவலராக பணியாற்றி இருக்கிறார். அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்களும் மற்றும் உறவினர்களும் பலபேர் காவல் துறையிலேயே பணியாற்றி வருகிறார்கள்.

அவருடைய உறவுக்கார பெண் காவலர் ஒருவர் கண்ணீர் மல்க பேட்டி அளித்தார் அப்போது அவர் தெரிவித்ததாவது,

ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் சத்யாவின் குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அதே குடியிருப்பில் ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் தயாளனின் மகன் சதீஷ் வசித்து வருகிறார்.

அவர் வேலைக்குச் செல்லாமல் வெட்டியாக ஊர் சுற்றுபவர். சத்யாவை கல்லூரிக்கு செல்லும் போது தொடர்ந்து தொந்தரவு செய்து கொண்டே இருந்தார் என்று தெரிவித்துள்ளார் அந்த உறவுக்கார பெண்.

இதுகுறித்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பே காவல்துறையில் புகார் வழங்கினோம் அப்போது காவல்துறையினர் சதீஷை அழைத்து விசாரணை நடத்தினார்கள். அதன் பிறகு சத்யாவின் தாயாரை சதீஷ் நேரில் சந்தித்து இனி நான் சத்யாவை தொந்தரவு செய்ய மாட்டேன் என்று தெரிவித்திருக்கிறார்.

ஆனால் சத்யா வெளியில் செல்லும்போது தொடர்ந்து அவருக்கு தொந்தரவு கொடுத்தது குறித்து காவல்துறையினர் விசாரணை மட்டுமே நடத்தினார்கள். வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

ஒருவேளை காவல் துறையினர் விசாரணை நடத்தி சதீஷ் மீது கைது நடவடிக்கை மேற்கொண்டு இருந்தால் இந்த படுகொலை சம்பவம் நடக்காமல் தடுத்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

எங்களுடைய குடும்பத்தை சார்ந்தவர்களும் பலமுறை சதீஷை கண்டித்து இருக்கிறோம். ஆனால் அவர் கேட்கவில்லை என்று தெரிவித்துள்ளார் அந்த பெண் காவலர்.

இத்தனை வருட காலம் வளர்த்து எந்த விதமான தவறும் செய்யாத நிலையில், சத்யாவை சதீஷ் கொடூரமாக கொலை செய்துள்ளார். ஆகவே அவருக்கு மரண தண்டனை வழங்கினாலும் தவறில்லை.

சதீஷ் நடவடிக்கை குறித்து அவருடைய தாயார் மற்றும் சகோதரி உள்ளிட்டவரிடம் தெரிவித்திருக்கிறோம். அவர்களும் அவரை சரியான முறையில் கண்டிக்கவில்லை. ஆகவே அவர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார் அந்த உறவுக்கார பெண் காவலர்.