
அ.தி.மு.க வின் நிலை குறித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க-வின் தற்போதைய அரசியல் நிலை குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “அ.தி.மு.க தலைமைக்கான பிரச்சனையால் சிதைந்து கிடக்கிறது. மக்களை காப்பாற்றும் நிலையில் அ.தி.மு.க இல்லை. முதலில் அ.தி.மு.க-வை மீட்டெடுங்கள் பிறகு தேர்தலை பற்றி பேசுங்கள்” என்றும், அ.தி.மு.க தற்போது 5 அணியாக பிரிந்திருக்கிறது என்றும் கூறியிருந்தார்.
மேலும் அவர், “ஜெயலலிதா காலத்திற்குப் பிறகு அ.தி.மு.க-வில் ஒற்றுமை இல்லை. ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., சசிகலா, தினகரன் என பலர் பிரிந்து கிடப்பதால், அந்தக் கட்சி மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளது. எனவே தி.மு.க அரசுக்கு எதிராக பேசும் தகுதியே அவர்களுக்கு இல்லை” என்றும் கூறினார்.
மேலும் பேசிய அவர். “இன்று தமிழக மக்கள் நம்பிக்கையுடன் தி.மு.க அரசின் பக்கம் நிற்கின்றனர். நாங்கள் ஆட்சியில் செயல்பாடுகளை நிரூபித்து வருகின்றோம். ஆனால் அ.தி.மு.க-வுக்கு செய்ய ஒன்றும் இல்லை, அவர்கள் செய்யும் ஒரே வேலை அவர்களுக்குள் சண்டையிடுவதே ஆகும் என்றும் விமர்சித்திருந்தார்.
உதயநிதியின் இந்தக் கருத்து அ.தி.மு.க வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே உட்கட்சிப் பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் அ.தி.மு.க. இப்போது அரசியல் எதிரிகளின் விமர்சனத்துக்கும் வழி விட்டதாக அரசியல் ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர். வரவிருக்கும் 2026 தேர்தலை முன்னிட்டு, உதயநிதியின் இந்த கூற்று அ.தி.மு.க விற்கு புதிய அழுத்தத்தை உருவாக்கும் எனக் கூறப்படுகிறது.