நோய்த்தொற்று பரவல் கடந்த டிசம்பர் மாதம் இறுதி கட்டத்தில் இருந்து மறுபடியும் அதிகரிக்கத் தொடங்கியது, இதன் காரணமாக, சென்ற மாதம் மறுபடியும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. தமிழ்நாட்டில் தமிழக அரசின் சார்பாக சிலபல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
அவ்வாறு விதிக்கப்பட்ட ஊரடங்கை சென்ற 20 ஆம் தேதி தமிழக அரசு விலக்கிக்கொண்டது. பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது. நோய் தொற்று பாதிப்பு இருந்து வரும் இந்த சூழ்நிலையிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்றைய தினம் முதல் செயல்பட இருக்கிறது.
பள்ளிகளைப் பொருத்த வரையில் முதலில் 10 மற்றும் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வரவிருக்கும் காரணத்தால், அந்த வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே பள்ளிகள் செயல்படும் என்று எதிர்பார்த்திருந்த சூழ்நிலையில், 1 முதல் 12ம் வகுப்பு வரையான அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.
அந்த விதத்தில் இன்று திறக்கப்படும் அனைத்து வகை பள்ளிகளிலும், தமிழக அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி எல்லா மாணவர்களுக்கும் 100% நேரடி வகுப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கவேண்டும் என்றும், மாணவர்களுடைய கல்வித்தரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் அதில் தீவிரமான கவனத்தை செலுத்தவேண்டும் எனவும், பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் கூறியிருக்கிறது.
தனியார் பள்ளிகளை பொருத்தவரையில் இணையதள வகுப்புகளுக்கு ஏற்கனவே அவர்கள் முக்கியத்துவம் வழங்காமல் நேரடி வகுப்புகளை தான் அதிகம் விரும்புகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசுப் பள்ளிகளைக் கவனிக்கும்போது இணையதள வகுப்பென்பது கல்வி தொலைக்காட்சி மூலமாக மட்டுமே நடந்து வருகிறது. சில அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் முயற்சியின் காரணமாக, வாட்ஸ்அப் மூலமாகவும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
அந்தவிதத்தில் கல்வித்துறையின் உத்தரவின் அடிப்படையில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நேரடி வகுப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அதோடு நோய் தொற்று பாதிப்பு அதிக அளவில் இருக்கும் இடங்களில் மட்டும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நேரடி வகுப்புகளை குறைத்துக்கொண்டு இணையதள முறையில் வகுப்புகளை நடத்துவதற்கும் அனுமதி வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
அதேபோன்று கல்லூரிகளிலும் மாணவர்கள் நேரில் வகுப்புகளுக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது, நேரடி வகுப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கும் அதே சமயம் சமூக இடைவெளி, கைகளை அவ்வப்போது கிருமிநாசினி மற்றும் சோப்பு உள்ளிட்டவற்றை கொண்டு கழுவுவது, போன்ற அரசு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாணவர்களுடைய பாதுகாப்பில் மிகுந்த கவனம் செலுத்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு கல்வித்துறை சார்பாக அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்படுகிறது.