சுமார் 9 மாதங்களுக்கு பின்னர் தமிழகத்தில் பள்ளிகள் இன்றைய தினம் மறுபடியும் திறக்கப்பட்டு இருக்கின்றன.
இன்றைய தினம் பள்ளிகள் திறக்கப்படும் என்ற காரணத்தால் ,நேற்று பள்ளிகளின் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து இருக்கிறார்கள். பள்ளிகள் திறக்கப்பட்டு இரண்டு தினங்கள் மாணவர்கள் அனைவருக்கும் ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலே கொரோனா பாதிப்பு காரணமாக சென்ற வருடம் மார்ச் மாதம் முதல் கல்லூரிகள், பள்ளிகள், போன்ற கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன.
இந்த நிலையில், சுமார் ஒன்பது மாதங்கள் கழித்து ஜனவரி மாதம் 19ஆம் தேதி ஆன இன்றைய தினம் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.இதன் காரணமாக பள்ளிகளில் இருக்கும் அனைத்து வசதிகளும் சரியாக இருக்கிறதா? என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் பார்வையிட்டதோடு பள்ளி வளாகத்திலே தேங்கி இருந்த குப்பைகள் போன்றவற்றை மாநகராட்சி ஊழியர்கள் அகற்ற முற்பட்டனர்.
இதுதவிர பள்ளிகளில் இருக்கும் மேசைகள், நாற்காலிகள், கதவு, ஜன்னல்,போன்றவை அனைத்தும் சரியாக இருக்கிறதா என்ற ஆய்வுப் பணிகளும் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து இன்றைய தினம் மாணவர்கள் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாத்திரையும் கொடுக்கப்பட்டு வருகின்றது. அதோடு ஆசிரியர்களால் மாணவர்களுக்கு கொரோனா விதிமுறைகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.