ஜூன் 6ம் தேதி பள்ளிக்கள் திறக்க கூடாது! கோரிக்கை வைத்த ஜி.கே வாசன்!
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும் எம்பியுமான ஜி.கே வாசன் அவர்கள் ஜூன் 6ம் தேதி பள்ளிகளை திறந்து வகுப்புகளை தெடங்குவதற்கு பதிலாக பள்ளிகள் திறப்பதை ஒருவார காலம் தள்ளி வைக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும் எம்பியுமான ஜி.கே வாசன் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் “தமிழ் நாட்டில் தற்பொழுது வெப்பம் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றது. தற்போது நிலவி வரும் வெயில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
இந்த கோடைகாலத்தால் மாநிலத்தில் பல இடங்களில் பகல் நேரங்களில் மக்கள் வெளியே வரமுடியாத சூழ்நிலையில் இருக்கின்றனர். மக்களும் கால்நடைகளும் வெயிலால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். கடுமையான வெயில் காரணமாக ஒவ்வொருவரும் அவர்களுடைய பணியில் முழு கவனம் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.
தற்பொழுது குடிநீர் தட்டுப்பாட்டு பிரச்சனையும் ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளிகளுக்கும் குடிநீர் கிடைப்பதில் தடை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றது. இந்த கடுமையான வெப்பத்தினால் இந்தியாவில் பல மாநிலங்களில் மக்கள் மயங்கி விழுவதும் உயிரிழப்புகள் ஏற்படுவதும் எனக்கு வருத்தம் அளிக்கின்றது.
டெல்லி போன்ற பல வடமாநிலங்களில் கடுமையான வெப்ப அலை வீசி வருகின்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என்ற. நிலையில் பல மாநிலங்கள் வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பை தள்ளி வைத்துள்ளது.
எனவே தமிழக அரசு மாநிலத்தில் நிலவும் வெயிலின் தாக்கத்தை கவனத்தில் கொண்டு பள்ளிகளில் வகுப்புகளை ஜூன் 6 ல் தொடங்குவதற்கு பதிலாக ஒரு வார காலம் தள்ளி வகுப்புகளை தொடங்க ஆலோசனை செய்து அறிவிப்பு வெளியிட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.